வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்பு ஒட்டுமொத்த சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை மிக கடுமையாக பாதித்தது. இன்னும் புறநகரின் பல பகுதிகளில் மக்கள் இயல்பு வாழ்க்கை சரியாக நிலை காணப்பட்டு வருகிறது.
விஜய் மக்கள் இயக்கம்
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அரசு சார்பிலும் தன்னார்வலர்கள் சார்பிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.
மருத்துவ முகாம்
இதுதொடர்பாக, அவர்கள் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “மிக்ஜாம் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும் காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வரும் 14.12.2023 (நாளை மறுநாள்) காலை 8.5 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
வட சென்னை, மத்திய சென்னை. தென் சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்க உள்ள இந்த மருத்துவ முகாம்கள் மூலமாக குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்களின் நலன் காக்கும் இம்மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் அரசியலில் விரைவில் களமிறங்க உள்ளதால் தற்போது முதல் மக்கள் நலப்பணிகளை துரிதப்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.














