தே.மு.தி.க. கட்சியின் தலைவரும், சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமானவர் விஜயகாந்த். ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு நிகரான ரசிகர்களை கொண்ட நடிகரான விஜயகாந்த் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதி:
விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ரசிகர்களும், தொண்டர்களும் மிகுந்த சோகம் அடைந்தனர். மேலும், அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து வெளியான செய்திகளும், வதந்திகளும் ரசிகர்களை மேலும் பதற்றம் அடைய வைத்தது. மருத்துவமனையைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டதும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.
குணமடைந்தார் விஜயகாந்த்:
இதையடுத்து, விஜயகாந்தின் புகைப்படத்தை வெளியிட்டு கேப்டன் நன்றாக இருக்கிறார் என்று அவரது மனைவி பிரேமலதா அறிவிப்பை வெளியிட்ட பிறகே ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில், விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியான நிலையில், இன்று அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சென்னை மியாட் மருத்துவமனை இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் என்று தெரிவித்துள்ளது.
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள விஜயகாந்த் குணம் அடைந்து வீடு திரும்பிய நிகழ்வு ரசிகர்களுக்கு மிகுந்த நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. குணமடைந்து விஜயகாந்த் வீடு திரும்பியதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் வழிபாடு நடத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவில் விஜயகாந்த் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதுடன், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக சிறப்பாக செயல்பட்டு நடிகர் சங்க கடனையும் அடைத்தவர் என்ற பெருமைக்குரியவர்.













