தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான நடிகர் விஜய் தவெக-வை தொடங்கியது முதலே தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதத்திற்கும் குறைவான மாதங்களே உள்ள நிலையில் விஜய் தனது அரசியல் பயணத்தில் வேகத்தை கூட்டினார்.
கரூர் துயரம்:
கரூரில் நடந்த பரப்புரையில் விஜய்யை காண வந்த 41 பேர் அப்பாவி மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்திற்கு காரணம் என்று குறிப்பிட்ட இடத்தை வழங்காதது போன்ற பல காரணங்களைக் கூறி ஆளுங்கட்சியை விஜய் மற்றும் தவெக-வினரும், விஜய்யின் அனுபவமின்மை, திட்டமிட்டே தாமதமாக வந்ததே காரணம் என்று மற்றொரு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கரூருக்கே வராத விஜய்யும், தவெக-வும்:
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், பாதிக்கப்பட்டவர்களையும் காண்பதற்காக திமுக, அதிமுக, பாஜக, விசிக என அனைத்து கட்சித் தலைவர்களும் சென்ற நிலையில் தவெக தரப்பில் இருந்து இதுவரை யாருமே செல்லாதது மிகப்பெரிய அதிருப்தியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை விஜய் கையாண்ட விதம் அவரது ரசிகர்களுக்கே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த உடன் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் பார்க்கச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சென்னை திரும்பினார். சென்னை வந்த உடன் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடியோ வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 நாட்கள் கழித்து வீடியோ வெளியிட்டார். தவெக தரப்பில் 20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டாலும் அதை கொண்டு சென்று தருவதற்கு எந்த நிர்வாகியும் தற்போது தயாராக இல்லை.
மோசமான இரண்டாம் கட்டத் தலைவர்கள்:
புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மல்குமார் தலைமறைவாகிய நிலையில் ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றுவிட்டார். ராஜ்மோகன், லயோலா மணி போன்ற யாரும் வாய் திறக்கவில்லை. மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ யாராக இருந்தாலும் களத்திற்கு வர வேண்டும் என்பதே மக்களின் எண்ணம். விஜய்யைப் பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு விஜய்யும், விஜய் தரப்பும் தற்போது வரை நேரில் வராதது மக்களுக்கும், அவரது தொண்டர்களுக்கும் பெரும் வருத்தத்தை அளித்துள்ளது.
அரைக்கம்பத்தில் கூட பறக்காத கொடி:
பொதுவாக ஒரு துக்க நிகழ்வு என்றால் அந்தந்த கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுவது வழக்கம். அது உயிரிழந்தவர்களுக்கு செய்யப்படும் அடிப்படை மரியாதை. அதைக்கூட தவெக செய்யாதது அவர்களுக்கு அரசியல் பற்றிய புரிதல் இல்லை என்பதையே காட்டுகிறது.
விஜய்க்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி புகழ் வெளிச்சம் சூட்டிக் கொள்ளத் துடிக்கும் சிலரே விஜய்யின் அருகில் இருக்கிறார்கள் என்பதையும், ஒரு நெருக்கடியான சமயத்தில் விஜய்க்கு தகுந்த அறிவுரை வழங்கவும், விஜய்யை வழிநடத்தவும், விஜய்க்காக களத்திற்குச் செல்லவும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாருமே தவெக-வில் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா?
கைது நடவடிக்கைக்கும், களத்திற்கும் செல்லத் தயங்கும் இரண்டம் கட்டத் தலைவர்களை வைத்துக் கொண்டு விஜய் அரசியல் கட்சியை நடத்தவும், தேர்தலையும் எதிர்கொள்ள முயற்சித்தால் அவருக்கு அது பெரும் சிரமத்தை உண்டாக்கிவிடும். மேலும், இந்த சம்பவங்கள் அனைத்தும் விஜய்க்கு நெருக்கடியை சமாளிக்கத் தெரியவில்லையா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இந்த சம்பவத்தில் இருந்து அவர் மீண்டு வர பரப்புரை மூலம் அதிகரித்து வந்த அவரது அரசியல் செல்வாக்கை அதிகரிக்க அவர் திடகாத்திரமான வியூகம் வகுக்க வேண்டும்,














