18வது சீசன் ஐபிஎல் தொடர் இனிதே நிறைவுற்றுள்ளது. இறுதிப்போட்டியில் ஆர்சிபி – பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியில் விறுவிறுப்பாக நடந்த இந்த மோதலில் ஆர்சிபி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.
கோலியின் கைகளில் ஐபிஎல்:
ஐபிஎல் தொடர் ஆடும் அணிகளிலே மிக அதிகளவு விமர்சனங்களையும், கேலிகளையும் சந்தித்த ஒரு அணி ஆர்சிபி-யே ஆகும். ஏனென்றால் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி விளையாடி வந்த சூழலிலும், கடந்த 17 ஆண்டுகளில் 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதே காரணம் ஆகும்.
ரசிகர்களின் இணையதள மோதல் வீரர்களே கேலி செய்யும் அளவிற்கு வளர்ந்தது. இந்த தொடருக்கான ஏலத்தில் ஆர்சிபி எடுத்த வீரர்களை வைத்து இணையத்தில் மிக மோசமாக விமர்சனங்களும், மீம்ஸ்களும் ஆர்சிபி மீது எழுந்தது.அத்தனை விமர்சனங்களுக்கும் பதிலடி தரும் வகையில் ஆர்சிபி அணி கோப்பையை கையில் ஏந்தியுள்ளது. கெயில், டிவிலியர்ஸ், கோலி ஆகிய ஜாம்பவான்கள் இணைந்து விளையாடியபோதும் கைக்கு வராத கோப்பை கெயில், டிவிலியர்ஸ் இருவரும் இல்லாத நிலையில் விராட் கோலி மட்டும் ஆடி வரும் சூழலில் நேற்று கைக்கு எட்டியுள்ளது.
காத்திருப்பு:
கிரிக்கெட்டில் முறியடிக்கவே முடியாது என்று கருதிய சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை எல்லாம் முறியடித்த விராட் கோலியின் கைகளில் ஐபிஎல் கோப்பையை காண வேண்டும் என்று கோடிக்கணக்கான இதயங்கள் காத்திருந்த சூழலில் நேற்று இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. இந்த வெற்றிக்காக 6 ஆயிரத்து 256 நாட்கள் ஆர்சிபி காத்திருந்துள்ளனர்.
லாலி பப் உள்ளிட்ட ஏராளமான விமர்சனங்களை எதிர்கொண்ட ஆர்சிபி அணி இந்த தொடரில் 17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணியை சேப்பாக்கம், பெங்களூரில் வீழ்த்தியது, மும்பையை 10 ஆண்டுகளுக்கு பிறகு வான்கடேவில் வீழ்த்தியது, கொல்கத்தா அணியை ஈடன் கார்டன் மைதானத்தில் வீழ்த்தியது என பல வரலாறுகளை படைத்தது.
அசத்தல் வெற்றி:
ரஜத் படிதார் கேப்டன்சியில் இளம் வீரர்களான ஜிதேஷ் சர்மா, சுயாஷ் சர்மா, யஷ் தயாள், படிக்கல் உள்ளிட்ட வீரர்கள் அசத்தினர். அனுபவ வீரர்களான கோலி, மயங்க் அகர்வால், ஹேசில்வுட், புவனேஷ்வர், குருணல் பாண்ட்யா தங்களது அனுபவத்தை தொடர் முழுவதும் வெளிப்படுத்தினர். ஷெப்பர்ட், ஜேக்கப் பெத்தல், நுவன் துஷாரா என விளையாடிய ஒவ்வொருவரும் தங்கள் திறமையை வெளிக்காட்டினர். ஆர்சிபியின் வெற்றி கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.














