சென்னை, நுங்கம்பாக்கத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இன்று காலை அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஆசிரியர்களை கைது செய்த காவல்துறையின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர்கள் போராட்டம்:
இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “எதிர்கட்சியாக இருக்கும்பொழுது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என்ற கொள்கையை கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த நீங்கள், 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது திமுக வெளியிட்ட 311-வது மற்றும் 181 ஆம் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த 9 நாட்களாக அமைதியான ஜனநாயக முறையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்,
விடுதலை செய்ய வேண்டும்:
அவர்கள் போராட்டத்தில் வைக்கப்பபட்ட நீங்கள் கொடுத்த 311 மற்றும் 181வது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன்.
100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன் என்று பொய்யை சிறு தயக்கம் கூட இல்லாமல் மக்களிடம் கூறி ஏமாற்ற முயற்சிக்கும் விடியா திமுக முதல்வர் ஸ்டாலின் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்கு தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.














