தமிழக அரசியல் வரலாற்றையும், திரைப்பட நடிகர்களையும் பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தனது மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலப்பணிகளை நடிகர் விஜய் மேற்கொண்டு வந்தார். அவர் அரசியல் கட்சி தொடங்குவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். நடிகர் விஜய்யின் செயல்பாடுகளும் அப்படியே இருந்தது.
கட்சி தொடங்கிய விஜய்:
இந்த நிலையில், கடந்த வாரம் யாருமே எதிர்பார்க்காத தருணத்தில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார், இது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்சசியாக இருந்தது. விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்ததற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தாலும், முக்கிய அரசியல் கட்சிகளுக்கு விஜய் கட்சி தொடங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.
தமிழ்நாட்டின் மிக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜய். விஜய் கட்சி தொடங்கிய பிறகு, சமூக வலைதளங்களில் அவரை மிக கடுமையாக தி.மு.க. தொண்டர்களும், ஆதரவாளர்களும் விமர்சித்து வருகின்றனர். மற்ற கட்சிகளை காட்டிலும் நடிகர் விஜய்யை தி.மு.க.வினர் விமர்சிப்பதற்கு பல காரணங்கள் உள்ளது.
விஜய் – உதய்:
ஏனென்றால், விஜய் தன்னுடைய அறிவிப்பில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், நேரடியாக 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மட்டுமே போட்டியிட உள்ளதாகவும், வரும் மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியானது உதய் – விஜய் என்று இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தாலும் அடுத்த தலைவராக உதயநிதியே ஆவார் என்று கருதப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்களும், தொண்டர்களுமே விஜய்யை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். ஏனென்றால், தி.மு.க.விற்கு என்று மிகப்பெரிய தொண்டர்கள் படை இருந்தாலும், கருணாநிதி – மு.க.ஸ்டாலினுக்கு இருந்த தொண்டர்கள் பலம் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்தளவு இல்லை என்பதே உண்மை ஆகும்.
விஜய்க்கு வசப்படுமா வெற்றி?
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அரசியலில் இருந்து வருகிறார். பல ஏற்ற, இறக்கங்களை கண்ட பிறகு அவர் முதலமைச்சராக பதவியேற்றார். எதிர்க்கட்சி தலைவராக திறம்பட பணியாற்றியவர் மு.க.ஸ்டாலின். ஆனால், தந்தை மு.க.ஸ்டாலினுடன் ஒப்பிடும்போது உதயநிதி ஸ்டாலினின் அரசியல் செயல்பாடு தீவிரமானது கிடையாது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இதனால், உதய் – விஜய் என்ற போட்டி வரும்போது தமிழக மக்கள் மத்தியில் மிக பிரபலமானவராக விஜய்யே உள்ளார். நடிகர் என்ற ஒற்றை பிம்பதை்தை வைத்துக் கொண்டும், ரசிகர்களை மட்டும் நம்பிக் கொண்டும் அதை வாக்குகளாக மாற்ற முடியுமா? என்றால் நிச்சயமாக முடியாது என்றே சொல்ல வேண்டும். அதற்காகவே, விஜய் இந்த 2 ஆண்டுகால அவகாசத்தை எடுத்துக் கொண்டுள்ளார்.
சவால் தருவாரா?
விஜய் அரசியல் கட்சி தொடங்கியதால் தி.மு.க. மட்டுமின்றி அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., வி.சி.க. என முன்னணி கட்சிகளின் வாக்குகளும் பிரியும் என்று கருதப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் தற்போது பலமான எதிர்க்கட்சி தலைவர் இல்லாத சூழலில் அடுத்த முறையையும் ஆட்சியை தக்கவைக்க தி.மு.க. வியூகம் வகுத்து வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் கட்சி தொடங்கியிருப்பதாலும், விஜய்க்கு பெண்களின் ஆதரவு மிக அதிகளவு இருப்பதாலும் அடுத்த சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் வருகை மற்ற கட்சிகளை காட்டிலும் தி.மு.க.விற்கு பெரும் சவாலனதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.














