தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை உள்ளது. குறிப்பாக, தமிழ் மக்கள் தாங்கள் செய்யும் தொழிலை தெய்வத்திற்கு நிகராக போற்றி வருகின்றனர் என்பது மரபு.
சொந்த ஊர் திரும்பும் பயணிகள்:
ஒவ்வொரு ஆண்டும் வட இந்தியாவில் துர்கா பூஜை, நவராத்திரி என்று கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையை நாம் தமிழ்நாட்டில் ஆயுதபூஜையாக மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். விஜயதசமி தினத்தில் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
நடப்பாண்டிற்கான ஆயுதபூஜை பண்டிகை நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு திங்கள், செவ்வாய் கிழமையுடன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர், சேலம் ஆகிய பெருநகரங்களில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
களை கட்டிய கொண்டாட்டம்:
இதனால், நேற்று மாலை முதலே தமிழ்நாட்டின் பெரும்பாலான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் நிரம்பி வழிந்தன. இன்றும் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதால் கூடுதல் பேருந்துகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், காய்கறி சந்தைகளிலும் வழக்கத்தை காட்டிலும் காய்கறிகள் மற்றும் பழங்களின் வரத்துகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் பெரிய காய்கறி சந்தையான கோயம்பேடு சந்தையில் வெளிமாநிலத்தில் இருந்து வெளியூர்களில் இருந்தும் நேற்று முதல் காய்கறிகள், பழங்கள், பூக்கள் லாரிகளில் குவிந்து வருகிறது. அடுத்தடுத்து விஷேச நாட்கள் என்பதால் பூக்களின் விலையும் ஏறியுள்ளது.
கொலு பண்டிகை, சொந்த ஊருக்கு செல்லும் மக்கள், தொடர் விடுமுறை, காய்கறிகள், பழங்கள் விற்பனை ஜோர் என ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.














