தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களது ஒவ்வொரு நகர்வுகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
யார் அந்த சார்?
இந்த விவகாரத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் தி.மு.க. பிரமுகர் என்பதால் தி.மு.க.விற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாலும், இந்த வழக்கில் மாணவி அளித்த வாக்குமூலத்தில் ஞானசேகரன் ஒரு சாரை குறிப்பிட்டு மிரட்டியதாகவும், அந்த சார் யார்? என்றும் அ.தி.மு.க. தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.
இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்தி அ.தி.மு.க. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும், சட்டசபைத் தொடக்க நாளில் அ.தி.மு.க. யார் அந்த சார்? என்ற வாசகம் பொறித்த சட்டையுடன் வந்து சட்டசபைக்கு வந்தனர். ஆனால், அன்றைய நாள் ஆளுநர் வெளிநடப்பு செய்ததால் தி.மு.க. – ஆளுநர் மோதலே பெரும் பேசுபொருளாக மாறியது.
மீண்டும் போராட்டம்:
இந்த நிலையில், ஆளுநரைக் கண்டித்து தி.மு.க. தமிழ்நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் தி.மு.க. ஆளுநர் மோதலே பெரும் பேசுபொருளாக மாறியது. இதனால், அ.தி.மு.க. நடத்தும் போராட்டம் நீர்த்துப்போகும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்தனர்.
ஆனால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று நடக்கும் சட்டசபைக் கூட்டத்தொடரிலும் யார் அந்த சார்? என்ற வாசகம் பொறித்த சட்டையுடன் பங்கேற்றுள்ளனர். இதனால், அ,தி.மு.க.வின் போராட்டம் இன்று மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அ.தி.மு.க. தலைமை தி.மு.க.விற்கு எந்தளவு நெருக்கடி அளிக்க முடியுமோ? அந்தளவு நெருக்கடி அளிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், தமிழ்நாட்டையே நேற்று திரும்பி பார்க்க வைத்த டங்ஸ்டன் விவகாரத்தையும் கையில் எடுத்துள்ளது அ.தி.மு.க. டங்கஸ்டன் தடுப்போம் மேலூர் காப்போம் என்ற வாசகம் அணிந்த மாஸ்க்குடன் வந்து சட்டசபையை அதிரவைத்துள்ளனர் அ.தி.மு.க.வினர். இதுபோன்று இனி அடுத்தடுத்த நாட்களிலும் அ.தி.மு.க.வின் அதிரடி தொடரும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தி.மு.க.விற்கு எதிராக அடுத்த ஒரு வருடத்திற்குப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. மேலும், விரைவில் உள்கட்சியின் பல்வேறு சிக்கல்களையும் முடிவுக்கு கொண்டு வர அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளது.














