தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வாலத்தூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் பாலா (23) இவன் யூடியூப் மற்றும் இஸ்டா பக்கங்களில் வீடியோ பதிவிட்டு லைக்குகளையும், சேர்களையும் குவித்து வரும் இவர் யூடியூப் மூலம் லட்சங்களை சம்பாதித்து வருகிறார். இவருக்கு யூடியூபில் 22 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவன் சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்களையும் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
தண்ணீரில் தீ:
இந்த நிலையில் இவர் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவை குளத்தின் அருகே உள்ள முத்துலிங்கம் (75) என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்திற்கு அருகே உள்ள குளத்தில், மழை வெள்ளத்தின் காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளது. அங்கு சென்ற ரஞ்சித் பாலா தனது நண்பர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் மோகத்தில் அப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் சென்று ஒரு கட்டிடத்தின் மேல் நின்று கீழே நண்பர்களை நிற்க வைத்து, குளத்திற்குள் பெட்ரோலை ஊற்றி அதில் தீ வைத்து அந்த தீயில் குதிப்பது போல வீடியோ பதிவிட்டு அதை யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில் அருகில் நின்ற நண்பர்கள் மீது இந்த தீ பரவுகிறது. ஆனால் பெரிய அளவில் பாதிப்பு ஒன்றும் இல்லை. இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரது சமூக வலைதள பக்கங்களில் தேரிக்காட்டில் மண்ணுக்குள் தலைகீழாக புதைந்து நின்று சில மணி நேரம் கழித்து வெளியே வரும் வீடியோக்கள் என பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். தேரிக்காடு மணல் சில நேரங்களில் வேகமாக சரிந்து விழும் தன்மை கொண்டது. இதுபோல் ஆபத்தான வீடியோக்களை பதிவிடுவதால் அதைப் பார்த்து மற்றவர்கள் செய்து சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்படும்.
கைது:
இந்த நிலையில் இந்த வீடியோ ஆனது பல லட்சம் மக்களால் பார்க்கப்பட்டு போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பேரில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் இந்த வீடியோவில் இருக்கும் நபர்களை தேடிப் பிடித்து விசாரணை நடத்தி ரஞ்சித் பாலா, சிவக்குமார், இசக்கி ராஜா ஆகிய மூவர் மீது தண்ணீரை மாசுபடுத்துதல், சுற்றுச்சூழலை மாசுபடுத்துதல், நீர்ப்பாசன பணிகளில் காயம் ஏற்படுத்துதல், பிற நபருக்கு காயம் ஏற்படுத்துதல், மரணத்தை விளைவிக்கும் என தெரிந்தே முயற்சி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து ரஞ்சித் பாலா மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
யூடியூபில் இதுபோல ஆபத்தான வீடியோவை பதிவிட்டு லட்சங்களை சம்பாதிக்கும் இவர்கள் மீது போலீசார் கண்காணித்து காட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.














