தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் போண்டாமணி. பவுனு பவுனுதான் படம் மூலம் நடிகராக அறிமுகமான இவர் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நேற்று நள்ளிரவு உடல்நலக்குறைவால் காலமானார். இது ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இப்படி ஒரு சோகமா?
போண்டாமணி என்று அனைவராலும் அறியப்பட்ட இவரது பின்னணி மிகவும் சோகம் நிறைந்தது. போண்டாமணி அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் கேத்தீஸ்வரன். இலங்கைத் தமிழரான இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். சிங்கப்பூரில் நிகழ்ச்சிக்காக சென்ற பாக்யராஜூக்கும் இவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், சினிமா ஆசையுடன் சென்னை வந்தார். சென்னை வந்தவருக்கு பாக்யராஜ் பவுனு பவுனுதான் என்ற படத்தில் வாய்ப்பு வழங்கினார். ஆனாலும், அதன்பின்பு அவருக்கு பெரியளவில் பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. அந்த காலகட்டத்தில் பசியால் வாடிய அவர் பல நாட்கள் போண்டா மட்டுமே சாப்பிட்டு தனது பசியை போக்கியுள்ளார்.
அப்போது, கேத்தீஸ்வரன் என்ற தனது பெயரை சினிமாவுக்காக மாற்ற எண்ணினார்.
பெயர் வந்தது எப்படி?
கவுண்டமணியை ஆஸ்தான குருவாக எண்ணிய கேத்தீஸ்வரன், தனது பெயரையும், தனது பசியை போக்கி போண்டாவையும் இணைத்து போண்டா மணி என்று வைத்துக்கொண்டார். போண்டாமணி என்ற பெயர் மாற்றத்திற்கு பிறகு இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தது.
வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான படங்களில் தவிர்க்க முடியாத நடிகராக கலக்கியுள்ளார். சமீபகாலமாகவே சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.














