கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை இந்தியாவில் தொடங்குகிறது. 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய திருவிழாவாகவே கருதப்படுகிறது.
உலகக்கோப்பை தொடக்கம்:
நாளை நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், இறுதிப்போட்டியில் கோப்பையை பறிகொடுத்த நியசிலாந்தும் மோதுகின்றனர். அகமதாபாத்தில் நடக்கும் இந்த போட்டி நாளை 2 மணிக்கு தொடங்குகிறது. கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் இந்த போட்டியின் தொடக்க விழா நடைபெற உள்ளது.
தொடக்கப் போட்டி என்பதால் முன்னாள் வீரர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.சி.சி. அதிகாரிகளும், பி.சி.சி.ஐ. அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். அகமதாபாத் மைதானம் மிகப்பெரிய மைதானம் என்பதால், இங்கிலாந்து – நியூசிலாந்து ரசிகர்கள் அதிகளவில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த பாதுகாப்பு:
அகமதாபாத் மைதானத்தை சுற்றியுள்ள ஹோட்டல்களில் ரசிகர்கள் ஏற்கனவே புக் செய்துள்ளனர். நாளை தொடக்கப் போட்டி என்பதால் அந்த பகுதியில் போக்குவரத்தில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை தொடங்கும் போட்டியை முன்னிட்டு அகமதாபாத் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியா பங்கேற்கும் முதல் போட்டி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடக்கிறது. சென்னையில் வரும் 8-ந் தேதி இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல அதிக சாதகம் இருக்கும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கணித்துள்ளனர்.













