இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் 191 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை நோக்கி ஆடி வருகிறது.
அசத்தும் ஜோயல்:
விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் இல்லாததால் இந்த தொடர் முழுவதும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ரிஷப் பண்டிற்கு பிறகு இந்திய அணியில் விக்கெட் கீப்பராக தொடர்ந்து வாய்ப்பு பெற்று வந்த கே.எஸ்.பரத் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த காரணத்தால், அவருக்கு பதிலாக இளம் வீரர் துருவ் ஜோயலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை இரண்டாவது டெஸ்டிலே பிரமாதப்படுத்தி அசத்தியுள்ளார். இந்திய அணிக்காக இக்கட்டான நேரத்தில் அவர் அடித்த 90 ரன்களே இந்திய அணி முதல் இன்னிங்சில் 300 ரன்களை கடக்க உதவியது. இந்த நிலையில், இந்த தொடரில் மற்றொரு இளம் வீரரான ரஜத் படிதாருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
பரத்துக்கு இனி வாய்ப்பு இல்லை:
ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக ஆடிய அவர் இந்த தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விளையாடிய நான்கு இன்னிங்சிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்து வருகிறார். இதனால், அவருக்கான அடுத்தடுத்த வாய்ப்புகள் கேள்விக்குறியாகிவிடும்.
துருவ் ஜோயல் சிறப்பான ஆட்டத்தையும், கீப்பிங்கையும் வெளிப்படுத்துவதால் பரத்திற்கு இதற்கு பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றே கூறப்படுகிறது. 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 12 இன்னிங்சில் பேட்டிங் செய்து 221 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்துள்ளார். கிடைத்த அற்புதமான வாய்ப்பை பரத் கோட்டை விட்டதால் இனி வரும் போட்டிகளில் அவருக்கான வாய்ப்பும், இந்திய அணியில் இடமும் மிகவும் கடினம் ஆகிவிட்டது.
மீண்டும் வரும் ரிஷப் பண்ட்:
ரிஷப் பண்ட் குணமடைந்து விட்டதால் விரைவில் அவர் இந்திய அணிக்கு திரும்புவார் என்பதால், கே.எஸ். பரத்தின் வாய்ப்பு என்பது சுழியம் அளவிற்கு சென்று விட்டது. ஐ.பி.எல். தொடரிலும் குஜராத் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட பரத்திற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. பரத் மீண்டும் தன்னை நிரூபித்தால் மட்டுமே அணியில் அவருக்கான வாய்ப்பு வழங்கப்படும் என்பது உறுதி.













