ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி முதலில் பேட் செய்து 287 ரன்களை எடுத்தது.
தனி மனித போராட்டம்:
288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. களமிறங்கியது முதலே அதிரடியாக கோலியும் – டூப்ளிசிசும் ஆடினார்கள். மிகப்பெரிய இலக்கு என்றாலும் மனம் தளராமல் இருவரும் ஆடினார்கள். இதனால் ஸ்கோரும் ஏறியது. கோலி, ஜேக்ஸ், டுப்ளிசிஸ் அடுத்தடுத்து அவுட்டாக, 122 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்த பெங்களூர் அணிக்காக தனி ஆளாக போராடினார் தினேஷ் கார்த்திக்.
பெங்களூர் அணி இந்த போட்டியில் தோற்றாலும் ட்ராவிஸ் ஹெட், டுப்ளிசிஸ், கோலி, கிளாசென் ஆகியோரின் பேட்டிங்கை காட்டிலும் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம்தான் ரசிகர்களை கவர்ந்தது. இப்படியொரு பேட்ஸ்மேனுக்கு இந்திய அணியில் முறையான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று ஆதங்கமே ஏற்பட்டது.
மன உறுதி:
தோல்வி உறுதியாகிவிட்டது, 10 ஓவர்களில் 140 ரன்கள் தேவைப்படுகிறது, கையில் வெறும் 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது, பெரிய அனுபவ பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை என்ற சூழலில் தன்னந்தனி ஆளாக தினேஷ் கார்த்திக் ஆடிய விதம் ஒரு விளையாட்டு வீரனின் போராட்டமாக தெரியவில்லை. ஒரு போராளியின் போராட்டமாக தெரிந்தது.
ஏபி டிவிலியர்ஸ் போல விதவிதமான ஷாட்கள் ஆடி அசத்தினார். மார்க்கண்டே, நடராஜன், புவனேஷ்குமார், கம்மின்ஸ், உனத்கட் என யார் வீசினாலும் பந்தை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறக்கவிட்டார்.
வீரன் அல்ல, போராளி:
அதுவும் நடராஜன் பந்தில் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸர் 108 மீட்டருக்கு சென்றதுதான் இந்த சீசனில் அடிக்கப்பட்ட சிக்ஸரில் அதிகபட்ச தொலைவிற்கு சென்ற சிக்ஸர்.
வாழ்க்கை அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கொடுக்கும் என்பதற்கு தினேஷ் கார்த்திக் சிறந்த உதாரணமாக திகழ்கிறார். ஏறத்தாழ அவரது கிரிக்கெட் கேரியர் முடிந்துவிட்டது என்றே அனைவரும் சொன்ன தருணத்தில், இந்திய அணி ஆடும் போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றி தனக்கு இதுபோன்ற வாய்ப்பு கிட்டவில்லையே என்று ஏங்கியவருக்கு, பெங்களூர் அணி மூலம் மறுபிறவியே கிடைத்துள்ளது என்று சொல்லலாம்.
சிறந்த ஃபினிஷராக மிரட்டி வரும் தினேஷ் கார்த்திக் இந்த 38 வயதில் நேற்று நடந்த போட்டியில் 35 பந்துகளில் 5 பவுண்டரி 7 சிக்ஸருடன் 83 ரன்களை விளாசியுள்ளார். அவரது அபாரமான பேட்டிங்கால் 288 ரன்கள் இலக்கை நோக்கி துரத்திச் சென்ற பெங்களூர் அணி 262 ரன்களை எடுத்தது. நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி தோற்றாலும் அவர்கள் இலக்கை நோக்கி போராடியது அனைத்து அணியின் ரசிகர்களின் பாராட்டுகளையுமே பெற்றுள்ளது.













