ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிகவும் முக்கியமான இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். சென்னை அணி இந்த தொடரில் தொடக்கத்தில் வெற்றி பெற்றாலும் இடையில் சில போட்டிகளில் சொதப்பி வருகிறது.
சென்னை – ராஜஸ்தான்:
இந்த நிலையில், கடைசியாக ஆடிய போட்டியில் தோற்றது அவர்களுக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. இந்த சூழலில், ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணிக்கு இந்த போட்டியின் முடிவு அவர்களது ப்ளே ஆஃப் வாய்ப்பை பாதிக்காவிட்டாலும், அவர்கள் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருப்பதற்கு பக்கபலமாக அமையும்.
ஆனால், சென்னை அணிக்கு இன்றைய போட்டியின் முடிவு மிக அவசியமாக உள்ளது. கடந்த போட்டியில் சென்னை அணி பந்துவீச்சில் மிகவும் பலவீனமாக இருந்தது அப்பட்டமாக தெரிந்தது. பதிரானா, முஸ்தபிஷூர் ரஹ்மான் ஆகியோர் இல்லாதது அவர்களுக்கு பலவீனமாக மாறியது. இதனால், இன்றைய போட்டியில் சென்னை பந்துவீச்சில் என்ன செய்யப் போகிறது? என்ற கேள்வி எழும்பியுள்ளது.
தோனிக்கு இதுதான் கடைசி போட்டியா?
மேலும், இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் அடுத்து வரும் போட்டிகளின் முடிவுகள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் கடைசி லீக் போட்டி முடிவு ஆகியவற்றை பொறுத்தே சென்னை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு அமையும்.
லீக் வடிவிலான ஆட்டங்களைப் பொறுத்தவரை சென்னை அணிக்கு இன்றைய போட்டிதான் சேப்பாக்கத்தில் கடைசி போட்டி. அதாவது, தோனிக்கு இன்றைய போட்டிதான் கடைசி போட்டி லீக் வடிவில் இந்த தொரைப் பொறுத்தவரை. ஒரு வேளை தோனிக்கு இந்த சீசன் கடைசி சீசனாக இருந்து, சென்னை ப்ளே ஆஃப்க்கு செல்லாவிட்டால் இன்றைய போட்டிதான் சென்னையில் தோனியின் கடைசி போட்டி ஆகும். இதனால், இன்றைய போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
என்ன நடக்கும்?
அதேசமயம் பட்லர், ஜெய்ஸ்வால், சாம்சன், ரியான் பராக், ஹெட்மயர் என வலுவான பேட்டிங்கை கொண்ட ராஜஸ்தான் அணி ரன்கள் குவிக்க முனைப்பு காட்டும். கடந்த போட்டியில் சொதப்பிய ரஹானே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் இந்த போட்டியில் அசத்த வேண்டியது கட்டாயம். ஷிவம் துபே, மொயின் அலி, மிட்செல் கட்டாய அதிரடி காட்ட வேண்டும். ஜடேஜாவிற்கு பந்துவீச்சில் கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இன்றைய போட்டியின் முடிவு சென்னை அணிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்













