ராஜ்கோட்டில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியைப் பொறுத்தவரை ப்ளேயிங் லெவனை வைத்து பார்க்கும்போது இந்திய அணியை காட்டிலும் இங்கிலாந்து அணியே பலமான அணியாக இருந்தது.
ஆனால், இளம் இந்திய பேட்டிங் படையை கொண்டு இங்கிலாந்து அணியை ரோகித் சர்மா வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இளம் பேட்டிங்:
இந்த தொடர் முழுவதும் விராட் கோலி விலகியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இந்த சூழலில், 3வது டெஸ்ட் தொடங்கும் முன்பு ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் விலகியது மேலும் சறுக்கலை ஏற்படுத்தியது.
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தவரை ரோகித் சர்மா தவிர யாருமே அனுபவசாலிகள் அல்ல. ஜெய்ஸ்வால், கில், படிதார், சர்ப்ராஸ் கான் ஆகியோர் இளம் வீரர்கள் ஆவார்கள். இந்த மைதானத்தில் ஏற்கனவே சதமடித்து அசத்திய ஜடேஜா இந்த டெஸ்டிலும் சதம் அடித்து தனது அனுபவத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
அனுபவ பவுலர்கள்:
இங்கிலாந்து அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் கூட்டணியான ஆண்டர்சன், மார்க் வுட் ஆகியோரை சமாளித்ததுடன் அனுபவ சுழற்பந்துவீச்சாளரான ஜோ ரூட்டையும் சமாளித்து, புதிய சுழல் கூட்டணியாக உருவாகியுள்ள டாம் ஹார்ட்லி – ரெஹன் அகமதுவையும் இந்திய இளம் பேட்ஸ்மேன்கள் அசத்தலாக கையாண்டனர்.
குறிப்பாக, இரண்டாவது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி இரட்டை சதம் அடித்தார். பொதுவாக ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட்டத்தின் 3வது மற்றும் நான்காவது இன்னிங்சில் பேட்டிங் செய்வது எப்போதும் கடினமாக இருக்கும். அந்த சூழலில், ஆட்டத்தின் 3வது இன்னிங்சில் களமிறங்கி இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவர்.
குவியும் பாராட்டு:
பேட்டிங்கில் அனுபவம் குறைந்தவர்களாக இருந்தாலும் பந்துவீச்சில் பலம் பொருந்தியவர்களாகவே இந்திய அணி களமிறங்கியது. பும்ரா, சிராஜ், அஸ்வின், குல்தீப், ஜடேஜா தங்களது வேலையை சிறப்பாக செய்தனர். குறிப்பாக, இரண்டாவது இன்னிங்சில் ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இளம் பேட்டிங் படையை கொண்டு இங்கிலாந்து அணிக்கு 500 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்து வெற்றி பெற்ற ரோகித் சர்மாவிற்கு வாழ்த்துகள் குவிகிறது.













