உலகக்கோப்பைத் தொடர் முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், இந்திய அணி தன்னுடைய அடுத்த தொடரில் களமிறங்கியுள்ளது. இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்ற ஆஸ்திரேலிய அணியுடன் இன்று மோதுகிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா
ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் மைதானத்தில் இன்றைய போட்டி நடக்கிறது. இன்று நடக்கும் முதல் டி20 போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. உலகக்கோப்பையில் ஆடிய பெரும்பாலான வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், முற்றிலும் இளம் பட்டாளமாக இந்திய அணி இறங்கியுள்ளது.
டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்ற அந்தஸ்துடன் உள்ள சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இந்த போட்டியில் களமிறங்குகிறார்.
இளம் பட்டாளம்
இந்திய அணியின் பேட்டிங்கிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இஷன் கிஷன், ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ஷிவம் துபே, ரிங்கு சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா உள்ளனர். பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ்குமார், ஆவேஷ்கான், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் உள்ளனர்.
இந்த இளம் பட்டாளத்திற்கு எதிராக களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி வலுவான அணியாகவே உள்ளது. கேப்டன் மேத்யூ வேட் தலைமையில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், ஷார்ட், ஸ்மித், இங்கிலீஷ், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், டிம் டேவிட் என பேட்டிங்கில் வலுவாக உள்ளனர். பந்துவீச்சில் ரிச்சர்ட்சன், நாதன் எல்லீஸ், அப்பாட், ஜம்பா உள்ளனர்.
வெற்றி பெறுவது யார்?
அணிகளை வைத்து பார்க்கும்போது இந்திய அணியை காட்டிலும் ஆஸ்திரேலிய அணி வலுவாக இருந்த போதிலும் டி20 போட்டி என்பதால் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாற வாய்ப்பு உள்ளது. இரு அணியிலும் பந்துவீச்சை காட்டிலும் பேட்டிங் வலுவாக இருப்பதால் ரன் மழை இரு தரப்பிலும் பொழிவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணியுடனான உலகக்கோப்பைத் தோல்விக்கு பழி தீர்க்கவே இந்தியா விரும்பும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
எதில் பார்ப்பது?
உலகக்கோப்பைத் தொடர் முழுவதும் ஹாட்ஸ்டாரில் நாம் பார்த்து ரசித்திருப்போம். ஆனால், இன்று நடக்கும் போட்டியை ஜியோ, ஸ்போர்ட்ஸ் 18-ல் மட்டுமே பார்க்க முடியும். ஒளிபரப்பு உரிமையை அம்பானியின் வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.













