அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்த விடாமுயற்சியின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. துணிவு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு அஜித் ஒப்பந்தமான படம்தான் விடாமுயற்சி.
இன்று படப்பிடிப்பு:
மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தின் எந்த அப்டேட்டும் படக்குழுவிடம் இருந்து கிடைக்காத காரணத்தினால் ரசிகர்கள் வேதனையில் இருந்தனர். இதையடுத்து, அஜித் தனது பைக் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை கடந்த வாரம் திரும்பினார். இதையடுத்து, விடாமுயற்சி படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்தபடி விடாமுயற்சியின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. இதற்காக படக்குழு ஏற்கனவே வெளிநாடு சென்ற நிலையில் இன்று அஜர்பைஜானில் படப்பிடிப்பு தொடங்குகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் வகை படமாக உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை 50 நாட்கள் தொடர்ந்து வெளிநாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
ரசிகர்கள் உற்சாகம்:
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சஞ்சய் தத், திரிஷா ஆகியோரும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். படப்பிடிப்பை முழுவீச்சில் நடத்தி, படத்தை பொங்கலுக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. படத்தின் போஸ்டர், பர்ஸ்ட் லுக் என்று எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.














