இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலையைக் கண்டு ரசிகர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். முதல் அணியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்ல வேண்டிய அணி இப்போது அதற்கான 90 சதவீத வாய்ப்பை இழந்துவிட்டது.
கம்பீரின் செயல்பாட்டில் அதிருப்தி:
டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆலோசகராக இருந்து கோப்பையை வாங்கிக் கொடுத்த கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்கும்போது இந்திய அணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
டி20 உலகக்கோப்பையை வென்ற அணியின் துணைகேப்டன் ஹர்திக்பாண்ட்யாவிடம் இருந்து கேப்டன்சியை சூர்யகுமார் யாதவிடம் கொடுத்தார். இவர் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி டி20 தொடரில் மட்டுமே இலங்கைக்கு எதிராக வெற்றி பெற்றது. ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் லட்சுமணன் கீழ் இந்திய அணி பயிற்சி பெற்றது.
அடுத்தடுத்து தோல்வி:
இவரது தலைமையில் களமிறங்கிய வங்கதேச டெஸ்ட் தொடரை மட்டுமே வென்று, சொந்த மண்ணில் முதன்முறையாக நியூசிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆனது. அதற்கு முன்னதாக, இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை விராட் கோலி, ரோகித் சர்மா இருந்தும் 3-0 என்று தொடரை இழந்தது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கடும் நெருக்கடியில் களமிறங்கி இந்திய அணி முதல் டெஸ்டில் வெற்றி பெற்று, அழுத்தத்தை ஆஸ்திரேலிய பக்கம் திருப்பிய பிறகு இரண்டாவது டெஸ்ட்டில் படுதோல்வி, 3வது டெஸ்ட் டிரா, 4வது டெஸ்ட் தோல்வி என இறங்குமுகத்தில் உள்ளது.
கேள்விக்குறியில் இந்திய அணியின் எதிர்காலம்?
இவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோதே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த். இவர் வெறும் ஆலோசகர் மட்டுமே ஆவார். இவரை நியமிக்க வேண்டாம் என்று பலரும் கூறினர். கம்பீர் கேட்ட அனைத்து வசதிகளையும் அளித்து சகல வசதிகளையும் அளித்தது பிசிசிஐ. ஆனால், இந்திய அணியின் எதிர்காலத்தையே சிதைக்கும் வகையில் கம்பீரின் செயல்பாடுகள் அமைந்துவிட்டதாக பிசிசிஐ கருதுகிறது.
ரோகித், விராட் கிரிக்கெட் வாழ்வும் முடிவுக்கு வரும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஜாம்பவான் கிரிக்கெட்டில் இருந்து இடம்பெறும்போதும் அவரது இடத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு வீரரை இந்திய அணி உருவாக்கும்.
டெஸ்ட் வீரர்கள் எங்கே?
உதாரணமாக கேப்டன்கள் வரிசையில் கங்குலி, தோனி, கோலி, ரோகித் என வெற்றிகர கேப்டன்கள், வீரர்களாக சச்சின், கோலி, அதேபோல டெஸ்டில் டிராவிட், லட்சுமணனுக்கு பிறகு புஜாரா, ரஹானே என ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு வீரர் தயார்படுத்தப்பட்டிருப்பார்கள். இன்றைய சூழலில், டி20 வடிவத்தில் இந்திய அணிக்காக ஆட மட்டுமே வீரர்கள் குவிந்து கிடக்கின்றனர்.
டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட், லட்சுமணன், புஜாரா, ரஹானே போன்று ஆடும் வீரர்கள் இல்லை. கோலி, ரோகித் ஓய்வு பெற்ற பிறகு அவர்களது இடத்தை நிரப்பும் வகையில் வீரர்களை உருவாக்கும் பணியும் நடப்பது போல தெரியவில்லை. அதற்கு காரணம் வீரர்களுக்கு அணியில் நிரந்தர இடம் என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
இதுபோன்று பல கேள்விகளுக்கு இந்திய அணியை தள்ளிய கம்பீரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கலாமா? என்று பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. சிட்னி டெஸ்ட்டிற்கு பிறகு ரோகித் சர்மா ஓய்வு பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கம்பீரின் மோசமான பயிற்சிக்கு மத்தியில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் இன்னும் சில மாதங்களில் ஆடுகிறது.
இந்திய அணி வலுவான நிலையில் இருந்து அதளபாதாளத்திற்குச் செல்வது 2010ம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதன்முறை ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.














