கடந்த டிசம்பர் 3ம் தேதி சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னைவாசிகள் மிக மோசமான பாதிப்பை சந்தித்தனர், அன்றைய தினம் ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளக்காடாக மாறி காட்சி அளித்தது.
பல இடங்களில் தண்ணீர் வடிந்தாலும் வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, தாம்பரம், முடிச்சூர், மணலி, ஐ.ஓ.சி. நகர், மூலக்கொத்தளம் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது. இந்த பகுதிகளிலும் 5 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வடியாமலும், மின் தடையாலும் மிகுந்த சிரமத்திற்கு மக்கள் ஆளாகினர்.
வெள்ள நிவாரணம்:
சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் புயல் பாதிப்பு அதிகளவில் காணப்பட்டது. இதையடுத்து, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
நாளை தொடங்கி வைக்கும் முதல்வர்:
இந்த தொகையானது ரொக்கமாக நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான டோக்கன்களும் தற்போது வரை விநியோகிக்கப்பட்டு வருகிறது,
இந்த நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத் தொகையை வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். வெள்ளத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட வேளச்சேரியில் இந்த பணியை அவர் தொடங்கி வைக்கிறார். முதலமைச்சர் நாளை முதற்கட்டமாக இதை தொடங்கி வைக்கிறார்.
ரேசன் கடைகள் இயங்கும்:
அதேசமயம் ஞாயிற்றுக்கிழமையான நாளை சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நியாய விலைக்கடைகள் இயங்கும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நாளை நியாய விலைக்கடைகளில் டோக்கன் வழங்கப்படாத பகுதிகளுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நிவாரணத் தொகையை வழங்குவதால் விரைவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்தவர்களுக்கு இந்த நிவாரணத் தொகையை முழுமையாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சென்னை மாநகரம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.













