ஆண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போல ஆண்டுதோறும் மகளிருக்கான டி20 கிரிக்கெட் தொடரான டபுள்யூ பி எல் எனப்படும் மகளிர் பிரிமியர் லீக் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான மகளிர் பிரிமியர் லீக் பிப்ரவரி 14ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
நாளை மகளிர் பிரமியர் லீக் தொடக்கம்:
இதையடுத்து, மகளிர் பிரிமியர் லீக் நாளை இந்தியாவில் கோலாகலமாக தொடங்குகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள வதோராவில் முதல் போட்டி நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்.சி.பி.யுடன் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி மோதுகிறது. இந்த போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணிக்கு என்று ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். அதேபோல, மகளிர் பிரிமியர் லீக்கிலும் அதே ஆர்சிபி ரசிகர்கள் மகளிர் அணிக்கும் ரசிகர்களாக உள்ளனர். இதனால், இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆர்சிபி:
ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணியில் எல்லீஸ் பெர்ரி முக்கிய வீராங்கனையாக உள்ளார். மேகனா, ஸ்ரேயங்கா பாட்டீல், ரேணுகா சிங், ரிச்சா கோஷ் ஆகிய இந்திய வீராங்கனைகளும் நட்சத்திர வீராங்கனைகளாக உள்ளனர். கனிகாவும் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டேன்னி வ்யாட், ஜார்ஜியா, கிம் கார்த், ஹீத்தர், சார்லி முக்கிய வீராங்கனைகள் ஆவார்கள்.
குஜராத்:
குஜராத் அணிக்கு அனுபவ வீராங்கனை கார்ட்னர் கேப்டனாக உள்ளார். அந்த அணியில் பெத் மூனி, லாரா முக்கிய வீராங்கனைகள் ஆவார்கள். இவர்களுடன் ஹேமலதா, ஹர்லீன் தியோல், சிம்ரன் ஆகியோர் உள்ளனர்.
நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கும் ஆர்சிபி அணிக்கு அந்த அந்தஸ்து பலமாகவும், அதேசமயம் அதை தக்க வேண்டும் என்ற அழுத்தமும் உள்ளது. மகளிர் பிரிமியர் லீக்கை மும்பை அணி மற்றும் ஆர்சிபி அணிகள் கைப்பற்றியுள்ளது.
இதனால், இந்த கோப்பையை முதல்முறை கைப்பற்ற வேண்டும் என்று டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் அணிகளும் களத்தில் இறங்கியுள்ளன. நாளை தொடங்கும் இந்தத் தொடர் மும்பையில் வரும் மார்ச் 15ம் தேதி இறுதிப்போட்டியுடன் முடிகிறது. நாளை தொடங்கி அடுத்த ஒரு மாதத்திற்கு மகளிர் பிரிமீயர் லீக் தொடர் நடைபெற உள்ளது.
எப்படி பார்ப்பது?
மகளிர் பிரமியர் லீக் போட்டிகளை டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.
எங்கெல்லாம் போட்டிகள் நடக்கிறது?
இந்த போட்டிகள் அனைத்தும் வதோரா, பெங்களூர், லக்னோ மற்றும் மும்பையில் நடக்கிறது.














