நாடாளுமன்ற கூட்டுக்குழு புதிய வக்பு சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், இஸ்லாமிய தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
வக்புச் சட்டத்திருத்த மசோதா:
புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இச்சட்ட திருத்த மசோதா தொடர்பாக கூட்டுக் குழுவில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்கள் பரிந்துரைத்த அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேலவை உறுப்பினர்கள் பரிந்துரைத்த 14 தீர்மானங்களுக்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
குறுக்கு வழி:
பொதுமக்களிடமும், தன்னார்வ அமைப்புகளிடமும், அரசியல் கட்சி தலைவர்களிடமும் கருத்து கேட்பு என்ற பெயரில் நடத்தப்பட்ட அனைத்தும் மோசடி என்பது தெளிவாகி இருக்கிறது.
ஏற்கனவே தாங்கள் எடுத்த வஞ்சகமான முடிவை, தந்திரமாக அமல்படுத்தும் குறுக்கு வழியிலேயே அவர்களின் நடவடிக்கைகள் இருந்திருக்கிறது.
நாடகத்தனமாக ஒரு கூட்டுக் குழுவை அமைத்து; சர்வாதிகாரத்தனமாக அதில் அவர்கள் செயல்பட்டதும் அவ்வப்போது வெளிப்பட்டது.
சட்ட நடவடிக்கை தொடரும்:
மூச்சு திணறிக்கொண்டிருக்கும் இந்தியாவின் ஜனநாயகத்தை திணறடிக்கும் வகையில் இப்போது இம் முடிவை எடுத்திருக்கிறார்கள். நாடாளுமன்ற கூட்டு குழுவின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என கடுமையாக கண்டிக்கிறோம்.
இதற்கு எதிராக சட்டப்பூர்வமான – ஜனநாயக வழியிலான நடவடிக்கைகள் தொடரும் என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.














