வருடத்தின் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பை கொண்டிருந்தாலும் பிப்ரவரி மாதம் என்பது மிக மிக சிறப்பு வாய்ந்தது. மற்ற மாதங்களை போல இல்லாமல் 28 நாட்கள், லீப் வருடத்தில் மட்டும் 29 நாட்கள் என தனித்து வரும். இதைக்காட்டிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது பிப்ரவரி 14ம் தேதி ஆகும். ஆம் அன்றைய நாள் காதலர் தினம் ஆகும்.
காலமெல்லாம் காதல்:
இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக காதலர் தினம் கருதப்படுகிறது. காதலை கொண்டாடும் விதமாக கொண்டாடப்படும் நாளே காதலர் தினம் ஆகும். காதல் என்பது திருமணத்திற்கு பிறகும் கணவன் – மனைவிக்கு இடையே தொடர்ந்தால் மட்டுமே அந்த உறவின் மகத்துவத்தை நாம் உணர முடியும். பல திருமணங்களில் திருமணத்திற்கு பிறகு காதல் மறைந்து போவதாலே தம்பதியினர் இடையே அன்யோன்யம் குறைந்து இடைவெளி விழுந்து விவாகரத்து வரை செல்கிறது.
இன்றைய இளைஞர்களுக்கு காதலர்களை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்படுகிறது என்றே சொல்லலாம். முதல் பார்வையிலே காதல் என்பது காலம் காலமாக இருந்து வருகிறது. இன்றும் அது இருந்து வருகிறது. ஆனால், அன்றைய நாட்களை விட இன்றைய காலத்தில் காதல் முறிவுகள் அதிகளவு இருந்து வருகிறது. குறிப்பாக, இன்றைய நாட்களில் பெற்றோர்கள் பலரும் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் நபர்களாக மாறி வரும் நிலையில், காதல் முறிவுக்கான காரணம்தான் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
காதல் துணையை தேர்வு செய்வது எப்படி?
காதல் என்பதற்கு காத்திருப்பும், பொறுமையும் மிக அவசியம். ஏனென்றால், காலம் ஒவ்வொன்றையும் நமக்கு புரிய வைக்கும் என்பார்கள். அதைப்போல காத்திருந்து அடையும் காதலின் அருமையும் மிக அழகானதாக இருக்கும். அதற்காக காதலியையோ, காதலனையோ காக்க வைப்பது மிகவும் தவறான செயலும் கூட. இன்று பலரும் வேலை, தகுதி, படிப்பு சிலர் சாதி கூட பார்த்த பிறகே காதலிக்கிறார்கள். அதில் பெரிதாக தவறு ஒன்றும் சொல்வதற்கும் இல்லை. ஒவ்வொருவரின் விருப்பமும் ஒவ்வொன்றாக இருக்கும்.
ஆனால், நாம் தேர்வு செய்யும் காதலனோ, காதலியோ எப்படி இருக்க வேண்டும்? என்று கேட்டால் பலரையும் அழகையும், தோற்றத்தையும் மட்டுமே கூறுவார்கள். ஆனால், உண்மையாக காதல் துணையை எப்படி தேர்வு செய்ய வேண்டும்? என்று தெரியுமா? ஏற்றங்கள் நிறைந்தது மட்டுமே வாழ்க்கை அல்ல. சறுக்கல்களும், சங்கடங்களும் நிறைந்ததும் வாழ்க்கை. அதனால், உங்கள் வாழ்வில் என்ன நடந்தாலும், நீங்கள் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றாலும் நான் இருக்கிறேன் உனக்காக என்று சொல்லும் காதல் துணையே மிகச் சிறந்த துணை ஆகும். முதன்முதலில் கரங்களை பிடித்தபோது இருந்த அதே உணர்வுடன் நரை, கூன் விழுந்த பிறகும் உங்கள் கையை பிடிக்க ஒரு துணை கிடைத்தால் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை முழுமை பெற்றது என்று சொல்லலாம்.
மனம் விட்டு பேசுங்கள்:
அப்பேற்பட்ட துணை உங்கள் அழகை பார்க்காது. உங்கள் வசதியை பார்க்காது. உங்கள் வேலையை பார்க்காது. ஏனென்றால் இது எல்லாமே மாறக்கூடியது. ஆனால், குணம் மாறாதது. அன்பு மாறாதது. அப்பேற்பட்ட துணை உங்களுக்கு கிடைத்தால் எந்த சூழல் வந்தாலும் விட்டுவிடாதீர்கள். இழந்த பின்பு நீங்கள் கண்ணீர் வடித்தாலும், கதறினாலும் சில நேரங்களில் இழந்ததை அடையவே முடியாது. அதேசமயம், சண்டை என்பதும், பிரிவு என்பதும் எந்த உறவில்தான் வந்ததில்லை. நண்பர்கள், உறவினர்கள் என்று பல இடங்களில் பார்த்திருப்போம்.
காதல் மட்டும் சண்டைக்கு விதிவிலக்கானது அல்ல. சிலரின் காதலில் பிரிவுகள் அந்த காதலை வலுவாக்கி இறுக்கமாக கரங்களை பற்ற வைக்கும். சில காதலில் அந்த பிரிவு அவர்களை இன்னும் பிரிய வைத்து அந்த காதலையே உதற வைத்துவிடும். இருவரும் அந்த பிரிவை ஏற்றுக்கொண்டால் யாருக்கும் மனதில் காயங்கள் இருக்காது. ஒருவர் மட்டும் ஏற்று ஒருவர் ஏற்கவில்லை என்றால், ஏற்க மனம் மிகவும் மோசமான வேதனையை அனுபவிக்கும். இன்னொரு துணையை தேடவும் முடியாமல், பிடித்தவரிடம் போய் பேசவும் முடியாமல் அந்த மனம் படும் வேதனை சொல்லி அடங்காது.
இறுகப்பற்று:
அதனால், காதலுடன் கெஞ்சும் உள்ளத்திற்கு ஏற்க மறுத்தாலும் அவர் தரப்பு நியாயங்களை கேட்கவாது வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஏனென்றால், இங்கு பல உறவுகளில் பேசாமல் இருப்பதும், வறட்டு கௌரவமும், வீண் பிடிவாதமுமே பிரிவுகளுக்கு காரணமாக அமைகிறது. காதலர்கள் பிரிய முடிவெடுத்தால் பேசி முடிவெடுங்கள். இருவரில் ஒருவரேனும் முடிவெடுத்துவிட்டு பேசினால் அதில் எந்த பயனும் இல்லை.
ஏற்றமோ, இறக்கமோ உங்கள் கரங்களை இறுகப் பற்றிக் கொள்ளும் உறவு உங்கள் உயிரை விட மேலானது என்பதை உள்ளத்தில் ஆழமாக பதிய வையுங்கள், காலம் கடந்தும், நீங்கள் மண்ணில் மறைந்தாலும் உங்கள் காதல் நீடிக்கும்.














