மாதங்களில் அவள் மார்கழி என்று ஒரு பழைய பாடல் ஒன்று ஒலிப்பதை நாம் சிறு வயதில் கேட்டிருப்போம். தமிழ் மாதங்களிலே அந்தளவு சிறப்பு வாய்ந்த மாதம் மார்கழி ஆகும். மாதத்தில் ஒவ்வொரு நாளுமே சிறப்பு வாய்ந்த நாளாக மார்கழி உள்ளது. அப்பேற்பட்ட மார்கழி மாதத்திலே மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக வைகுண்ட ஏகாதசி உள்ளது.
எப்போது?
ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி வந்துவிட்டாலே வைணவ தலங்களில் பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து தரிசனம் செய்வது வழக்கம் ஆகும். நடப்பாண்டில் வைகுண்ட ஏகாதசி வரும் டிசம்பர் 23ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மார்கழி மாதம் வரும் 17ம் தேதி பிறக்க உள்ளது. மார்கழி மாதம் பிறக்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கோயில்களில் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. உலகப்புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிறந்தது எப்படி?
விண்ணுலகத்தில் ஒரு முறை தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அரக்கன் வதைத்துக் கொண்டிருந்தான். அவனது கொடுமை தாங்க முடியாத தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். மகாவிஷ்ணுவும் அரக்கன் முரனிடம் போரிட்டு அவனை வீழ்த்தினார். அவனை வீழ்த்திய பிறகு அவர் ஓய்வெடுக்கச் சென்றார். மகாவிஷ்ணு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் முரன் அவரை வீழ்த்த வாளை ஓங்கிக் கொண்டு வந்தான்.
அப்போது, மகாவிஷ்ணுவின் உடலில் இருந்து பேராற்றல் ஒன்றை பெண் ரூபத்தில் வெளிப்படுத்தினார். அந்த பெண் முரனிடம் போரிட்டு அவனை வெற்றி கொண்டார். அந்த பெண்ணிற்கு மகாவிஷ்ணு ஏகாதசி என்று பெயர் சூட்டினார். மேலும், முரனை ஏகாதசி வீழ்த்திய நாளே வைகுண்ட ஏகாதசி என்றும் கருதப்படுகிறது. புராணங்களில் வைகுண்ட ஏகாதசி இப்படியே பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த நாளில் பிரபல கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு அரங்கேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப்புகழ்பெற்ற ஸ்ரீரங்கம், திருப்பதி உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.














