தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் புதிய அரசியல் கட்சியாக கடந்தாண்டு களமிறங்கிய விஜய், இதுவரை வெளியில் வரவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதிலடி தரும் விதமாக தற்போது அவர் தனது கள அரசியலை தொடங்கியுள்ளார்.
ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்:
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ள பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் மக்களை நேரடியாகச் சென்று சந்தித்த விஜய்யின் பேச்சு அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரிட்டாப்பட்டியில் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த அரசு, பரந்தூரில் மட்டும் மக்களுக்கு எதிராக செயல்படுவது ஏன்? என்ற பல கேள்விகளையும், நம்புவது போல நடிப்பதில்தான் தாங்கள் கில்லாடிகள் என்றும் மிக கடுமையாக தி.மு.க.வை விமர்சித்தார்.
மேலும், தனது கள அரசியலை விவசாயிகள் மத்தியில் இருந்து தொடங்குவதாகவும் தெரிவித்தார். விஜய்யின் அடுத்த பயணம் சுமார் 3 ஆண்டுகளாக போராடி வரும் வேங்கைவயலுக்கு என்று தகவல்கள் வெளியாகியது. விஜய்யின் பரந்தூர் பயணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட நிலையில், விஜய் வேங்கைவயல் சென்றால் நிச்சயம் தி.மு.க.வுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது.
முக்கிய அறிவிப்பு?
இந்த நிலையில், திடீரென 3 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த வேங்கைவயல் விவகாரத்தை அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இதற்கான வீடியோ, ஆடியோக்களும் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களே எப்படி குற்றவாளிகளாக இருப்பார்கள்? என்று அரசுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவிற்கு கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். இந்த இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் நடிகர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அவரது சுற்றுப்பயண அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் அதிகளவு உள்ளதாக கூறப்படுகிறது.
தொடர் அதிரடிக்கு தயாராகும் தளபதி:
விஜய் தி.மு.க. அரசையும், பா.ஜ.க.வையும் மட்டுமே இதுவரை விமர்சித்து வருவது அவர் அரசியலில் திசை திரும்பாமல் இருப்பதையே காட்டுவதாகவும், தனது எதிரிகள் இவர்கள் மட்டுமே என்று மக்களுக்கு நினைவூட்டுவதாகவுமே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். இளைஞர்கள், பெண்கள் ஆதரவை அதிகளவு பெற்றுள்ள விஜய்யை நேற்று விழா மேடையில் மறைமுகமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியிருப்பதே அவரின் வரவு வாக்கு சதவீதத்தில் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துவதாகவே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இனி வரும் நாட்களில் விஜய் இதுபோன்று மேலும் பல அதிரடி பேச்சுக்கள் மூலமாக ஆளுங்கட்சிக்கு அழுத்தம் தர பல திட்டங்களை கையில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.













