தமிழ்கடவுளாக போற்றி வணங்கப்படும் முருகப்பெருமானுக்கு பல உகந்த நாட்கள் உள்ளது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்க நாள் தைப்பூசம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நாளில் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
தைப்பூசம் எப்போது?
தை மாதத்தில் பௌர்ணமி நாளில் வரும் பூச நட்சத்திரமே தைப்பூச திருநாளாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் 25ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தைப்பூச தினத்தில் முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமின்றி அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குரு பகவானுக்குரிய வியாழக்கிழமையில் தைப்பூசம் வருகிறது என்பதால் இந்த தைப்பூசம் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தைப்பூச திருநாளான வரும் 25ம் தேதி காலை 9.14 மணி முதல் அடுத்தநாள் 26ம் தேதி காலை 11.07 மணி வரை பூச நட்சத்திரம் வருகிறது. இதனால், 25ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. 24ம் தேதி இரவு 10.44 மணி முதல் 25ம் தேதி இரவ 11.56 மணி வரை பௌர்ணமி திதி வருவதால் 25ம் தேதி தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையான தை முதல் தேதி பிறந்தது முதல் தைப்பூச கொண்டாட்டமும் தொடங்கிவிட்டது.
களைகட்டும் முருகன் கோயில்கள்:
பக்தர்கள் முருகன் கோயில்களுக்கு படையெடுத்து வருகின்றனர். முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து முருகனை வேண்டி வருகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்சோலை உள்ளிட்ட அறுபடை வீடுகள் மட்டுமின்றி இதர முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் செய்யப்பட உள்ளது.
தைப்பூசத்தில் முருகன் கோயிலுக்கு நேரில் சென்று வழிபட்டால் பல்வேறு நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம் ஆகும்.
அன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தமிழ்நாட்டில் உள்ள அறுபடை வீடுகளில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவது வழக்கம்.














