நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல். தொடரில் 200 ரன்கள் முதல் 270 ரன்கள் வரை பட்டாசாய் கொளுத்திய வீரர்கள் இங்கு பவுண்டரிகளும், சிக்ஸரும் அடிக்கத் தடுமாறி வருகின்றனர். அதற்கு அமெரிக்க மைதானமும் ஒரு காரணம் ஆகும்.
பெரிதாக எடுபடாத பேட்டிங்:
ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பிட்ச்களில் தயார் செய்யப்பட்ட இந்த மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் மட்டுமின்றி, பெரும்பாலான அணியின் வீரர்களும் ரன்களை எடுக்கத் தடுமாறி வருகின்றனர்.
இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களாக கருதப்படும் ரோகித், விராட் கோலி இதுவரை ஆடிய போட்டிகளில் பெரியளவில் ரன்களை எடுக்கவில்லை. கடந்த போட்டியில் அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவே 49 பந்துகளில்தான் அரைசதம் அடித்தார். ரிஷப்பண்ட் ஓரளவு சிறப்பாக ஆடி வருகிறார்.
பவுலிங்கே பலம்:
இந்திய அணியின் பேட்டிங் சொல்லிக் கொள்ளும்படி இல்லாவிட்டாலும் பந்துவீச்சானது சிறப்பாக இருந்து வருகிறது. பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப்சிங், ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். ஆனால், ஐ.பி.எல். தொடரில் அசத்திய ஜடேஜா இந்த தொடரில் இன்னும் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அவர் இருப்பதே தெரியாத வகையில்தான் போட்டி நடக்கிறது.
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இந்திய அணியின் பந்துவீச்சே பிரதான காரணம் ஆகும். சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா முன்னேறியிருந்தாலும் இந்திய அணி தனது முழு பேட்டிங் பலத்துடன் களமிறங்கினால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும். ஏனென்றால் பலமிகுந்த அணிகள் அடுத்தடுத்து இந்திய அணியுடன் மோத காத்திருக்கின்றனர்.
குட்டி அணிகள் பெரிய அணிகளுக்கு ஷாக் அளித்து வரும் சூழலில், சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஜாக்கிரதையாக ஆடாவிட்டால் இந்திய அணியும் பெரும் அதிர்ச்சியை சந்திக்க நேரிடும்.













