உலகக்கோப்பை ஒருநாள் தொடர் முடிந்த பரபரப்பு அடங்குவதற்குள் டி20 உலகக்கோப்பைக்கான பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று அதன் அட்டவணை வெளியானது.
இந்தியா – பாகிஸ்தான் மோதல்:
இதன்படி, வரும் ஜூன் 1ம் தேதி உலகக்கோப்பை டி20 திருவிழா தொடங்க உள்ளது. தொடக்கப்போட்டியில் அமெரிக்காவும், கனடாவும் மோதுகின்றன. இந்திய அணி தனது தொடக்கப்போட்டியில் அயர்லாந்து அணியுடன் ஆடுகிறது. இந்தியா அதற்கு அடுத்த போட்டியில் ஜூன் 9ம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.
அதற்கடுத்த போட்டிகளில் அமெரிக்காவுடன் ஜூன் 12ம் தேதியும், கனடாவுடன் ஜூன் 15ம் தேதியும் மோதுகின்றன. இதில், முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்னவென்றால் இந்திய அணி ஆடும் லீக் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் நடக்கிறது. இது அமெரிக்கா வாழ் இந்தியர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்திய அணி முதலில் ஆடும் 3 லீக் போட்டிகள் நியூயார்க் நகரத்திலும், கடைசி லீக் போட்டி ப்ளோரிடாவிலும் நடக்கிறது.
அமெரிக்க மண்:
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் எத்தனையோ மைதானங்களில் மோதியிருந்தாலும், வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க மண்ணில் நேருக்கு நேர் மோத உள்ளன. அதுவும் முக்கியத்துவம் வாய்ந்த டி20 உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் நேருக்கு நேர் மோதுவது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் நகரத்தில் பாகிஸ்தான் ரசிகர்களை காட்டிலும் இந்திய ரசிகர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இது இந்திய அணிக்கு பக்கபலமாக இருக்கும். புதிய மைதானத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொள்ள இருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலும் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் டி20 உலகக்கோப்பையின் லீக் போட்டிகள் பெரும்பாலும் அமெரிக்காவில் நடக்கிறது. முதல் அரையிறுதி ஜூன் 26ம் தேதி கயானாவிலும், டிரினிடாட்டில் 2வது அரையிறுதியும், இறுதிப்போட்டி பார்படாஸில் 29ம் தேதியும் நடக்கிறது.













