மார்கழி மாதத்திலே மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி ஆகும். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது என்பது ஐதீகம் ஆகும். இதற்காக, முதல் நாள் இரவு முழுவதும் கோயிலில் கண் விழித்து பக்தி பாடல்களை பாராயணம் செய்து அதிகாலையில் சாமி தரிசனம் செய்வது வழக்கம் ஆகும்.
சொர்க்க வாசல் திறப்பு:
இன்று வைகுண்ட ஏகாதசி என்பதால் நேற்று இரவு முதலே தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் குவியத் தொடங்கினர். குறிப்பாக, வைணவத் தலங்களில் பக்தர்கள் திரளாக குவிந்து இரவு முழுவதும் பக்தி பாடல்களை பாடினர். சாமிக்கு சிறப்பு ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றது.
புகழ்பெற்ற திருப்பதி திருமலையான் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் உள்பட பல வைணவ தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு வெகு விமர்சியைாக கொண்டாடப்பட்டது. திருப்பதியிலும், ஸ்ரீரங்கத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
குவிந்த பக்தர்கள்
வைணவ தலங்கள் மட்டுமின்றி சிவாலயங்களிலும் இன்று காலை முதல் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சொர்க்கவாசல் திறப்பை காண தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோயில்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்த காரணத்தால் அந்தந்த பகுதிகளில் வழக்கத்தை விட போலீஸ் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.














