தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவராக உலா வருபவர் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் பட வெற்றிக்கு பிறகு அவர் நடித்த பிரின்ஸ் படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதையடுத்து, அவர் நடிப்பில் வெளியான மாவீரன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
குடும்ப ரசிகர்களை ரஜினி, விஜய்க்கு பிறகு அதிகளவில் கொண்ட நடிகராக வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது இயல்பான பேச்சும், நகைச்சுவை உணர்வும் ரசிகர்களை இவர் பக்கம் அதிக கவனம் செலுத்த வைக்கிறது. ரஜினி முருகன், நம்ம வீட்டுப்பிள்ளை போல தரமான குடும்ப படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.
அவரது நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த அயலான் படத்தின் டீசர் ரிலீசாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இந்த படத்தை இயக்கியிருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இன்று நாளை என்ற கால இயந்திர அடிப்படை கதை மூலம் அருமையான படத்தை இயக்கிய ரவிக்குமார், இந்த படம் மூலமாக வேற்றுக்கிரக வாசிகள் படத்தை தமிழில் தந்துள்ளார். சிவகார்த்திகேயன் – ரவிக்குமார் காம்போ நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று நம்பலாம்.














