உலகக் கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னாள் சாம்பியன்களும், சாம்பியன்கள் ஆக துடிக்கும் அணிகளும் மல்லுகட்டும் இந்த தொடர் விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடந்து வரும் இந்த தொடரில் ஆஸ்திரேலியா தவிர மற்ற முன்னணி அணிகள் கலக்கி வருகின்றன.
சுப்மன்கில்:
இந்த நிலையில், இந்த தொடரின் கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பான இந்தியா – பாகிஸ்தான் போட்டி நாளை மறுநாள் அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இரு அணிகளுமே சம பலம் வாய்ந்தது என்பது நாம் அனைவரும் அறிந்தது. ஆசியக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணிக்கு கூடுதல் நம்பிக்கையை தரும்.
இந்த நிலையில், இந்த தொடரில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று தன்னம்பிக்கையுடன் உள்ள இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2 போட்டியில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஆடாத தொடக்க வீரர் சுப்மன்கில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ள அவர் அகமதாபாத் மைதானத்திற்கு நேற்று வந்தார். அங்கு 1 மணி நேர உடற்பயிற்சியில் ஈடுபட்ட அவர் பின்னர் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார்.
பாகிஸ்தானுக்கு எதிராக ஆடுவாரா?
இதனால், பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் ஆடுவாரா? என்ற ஆர்வம் எழுந்துள்ளது. அடுத்த கோலி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சுப்மன்கில் அனைத்து வடிவ போட்டியிலும் சிறப்பாக ஆடி வருகிறார். ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய சுப்மன்கில், அகமதாபாத்திலும் களம் இறங்கினால் இந்திய அணிக்கு பலனுள்ளதாக அமையும்.
குஜராத் அணிக்காக அதிக முறை அகமதாபாத் மைதானத்தில் ஆடிய அனுபவமும் அவருக்கு இருப்பதால் அவர் அணியில் இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம் ஆகும்.
அவர் அணியில் மீண்டும் களம் இறங்கினால் இஷன்கிஷன் ஆடும் லெவனில் இடம்பிடிக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக வலுவான ப்ளேயிங் லெவன் இறங்க வேண்டியது என்பது மிகவும் அவசியம் ஆகும்.














