ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி நேற்று ஆடிய போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தூர் சிறிய மைதானம் என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே துரிதமாக ரன்களை சேர்த்தனர்.
ஸ்ரேயாஸ் அபாரம்:
ருதுராஜ் 8 ரன்களில் அவுட்டாக, காயத்திற்கு பிறகு அணிக்கு திரும்பிய ஸ்ரேயாஸ் தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில் கட்டாயம் நல்ல இன்னிங்ஸ் ஆட வேண்டிய நெருக்கடியில் களமிறங்கினார். ஆனால், எந்த நெருக்கடியும் இல்லாமல் களமிறங்கியது முதல் பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.
ஜான்சன், ஹேசல்வுட், அப்பாட், கிரீன், ஜம்பா என யார் வீசினாலும் ஸ்ரேயாஸ் வெளுத்து வாங்கினார். அவருக்கு மறுமுனையில் நின்ற சுப்மன்கில்லும் ரன் வேட்டையை நடத்தினார். பவுண்டரி, சிக்ஸர் என விளாசிய ஸ்ரேயாஸ் அரைசதம் கடந்தார். அரைசதம் கடந்த பின்பும் தனது ஆட்டத்தில் எந்த தொய்வும் காணாத வகையில் ரன்களை தொடர்ந்து குவித்துக் கொண்டிருந்தார்.
சூர்யா மிரட்டல்:
இவர்களது பேட்டிங்கால் இந்திய அணியின் ஸ்கோரும் எகிறியது. அபாரமாக ஆடிய ஸ்ரேயாஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் சிறப்பாக ஆடி 105 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டானார். 90 பந்துகளில் 11 பவுண்டரி 3 சிக்ஸருடன் 105 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட்டானார். அப்போது, இந்தியா 30.5 ஓவர்களில் 216 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த சில நிமிடங்களில் சுப்மன்கில்லும் 104 ரன்களில் அவுட்டானார்.
35வது ஓவருக்கு பிறகு வந்த சூர்யகுமார் யாதவ் ஆட்டத்தில் சரவெடியாய் வெடித்தார். நீண்ட நாட்களாக தடுமாறி வந்த அவர் சிக்ஸர் மழையை பொழிந்தார். குறிப்பாக, கிரீன் வீசிய ஒரே ஓவரில் 4 சிக்ஸர்களை அடுத்தடுத்து விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் நின்ற சூர்யகுமார் யாதவ் 37 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டு 6 சிக்ஸர், 6 பவுண்டரி விளாசி 72 ரன்கள் விளாசினார்.
ஆசிய கோப்பை உள்பட கடந்த சில தொடர்களில் சொதப்பி வந்த சூர்யகுமார் யாதவ், காயத்திற்கு பிறகு அணிக்கு திரும்பிய ஸ்ரேயாஸ் இருவரும் நேற்று பார்முக்கு திரும்பியது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.














