உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 191 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி 192 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது.
விமர்சனம்:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 200 ரன்களுடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியதால், இந்த போட்டியிலும் இந்திய அணி அப்படியொரு நிலைக்கு ஆளாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
ஆனால், அதற்கு துளியளவும் இடம் கொடுக்காமல் கேப்டன் ரோகித்சர்மா பார்த்துக் கொண்டார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடக்கப் போட்டியில் டக் அவுட்டாகிய ரோகித்சர்மா கடும் விமர்சனத்திற்கு ஆளானார். இதனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி அசத்தினார்.
பாகிஸ்தானுக்கு பயம் காட்டிய ஹிட்மேன்:
அவரது அபார சதத்தால் அந்த போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது. ஆனாலும், பெரிய அணிகளுக்கு எதிராக தடுமாறுகிறார். சின்ன அணிகளை சிதைக்கிறார் என்று ரோகித்சர்மா மீது விமர்சனம் வைக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அடிப்பாரா? என்று கேள்விகளும் முன்வைக்கப்பட்டது. இந்த விமர்சனங்களுக்கும், ஷாகின் அப்ரிடி பந்தில் தொடக்கத்திலே அவர் அவுட்டாகிவிடுவார் என்றும் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் நேற்று தனது பேட்டால் ரோகித்சர்மா பதில் தந்தார். போட்டி தொடங்கியது முதல் அவர் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். குறிப்பாக, அவர் ஷாகின் அப்ரிடி பவுலிங்கை விளாசினார்.
ஷாகின் அப்ரிடி, ஹசன் அலி, நவாஸ், ஹாரிஸ் ராஃப், ஷதாப் கான் என யார் வீசினாலும் வெளுத்து வாங்கினார். சுப்மன் கில், விராட் கோலி தலா 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் தனி ஆளாக ரோகித்சர்மா இந்திய அணியை வெற்றியின் அருகில் கொண்டு சென்றார். வெற்றியின் அருகில் இந்திய அணி நெருங்கியபோது ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித்சர்மா 86 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ரசிகர்கள் மகிழ்ச்சி
63 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்ஸர்கள் இதில் அடங்கும். ரோகித் சர்மாவிற்கே உரிய பல சிக்ஸர்கள் இதில் பறந்தது குறிப்பிடத்தக்கது. தான் எப்போதுமே ஹிட் மேன் என்பதை ரோகித்சர்மா நேற்று நிரூபித்தார். ரோகித் ஆட்டமிழந்தபோது 21.4 ஓவர்களிலே இந்தியா 156 ரன்களை எட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தன் மீதான விமர்சனங்களுக்கு தனது பேட்டால் பதிலடி தந்து விளாசிய ரோகித்சர்மா கம்பேக் தந்திருப்பது ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.













