ஜாதகத்தில் ராகு, கேது, செவ்வாய் தோஷங்கள் இருப்பதால் பலருக்கும் திருமணம் ஆகாமல் தள்ளிக் கொண்டே போகும். இதனால், ஜாதகத்தில் ராகு – கேது தோஷங்கள் இருப்பவர்கள் கீழே உள்ள கோயில்களுக்கு சென்று வணங்கினால் அவர்களது தோஷங்கள் நீங்கும். ராகு கேது தோஷத்தால் திருமணம் தள்ளிப்போவது மட்டுமின்றி தொழிலில் சிக்கல், உடல் உபாதைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இதனால், ஆலய வழிபாடு மூலம் அதிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை ஆகும்.
ஸ்ரீகாளஹஸ்தி:
ஆந்திராவில் திருப்பதிக்கு நிகரான புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று இந்த ஸ்ரீகாளஹஸ்தி கோயில் ஆகும். இந்த கோயிலில் பெருமாள் காற்றாக அருள் புரிவதால் இது வாயு தலமாக விளங்குகிறது. இங்குள்ள பெருமாளை வழிபடுவதால் ராகு – கேது தோஷம் நீங்கும்.
திருக்களாச்சேரி:
நாகப்பட்டினம், தரங்கம்பாடி அருகே அமைந்துள்ளது திருக்களாச்சேரி. அந்த மகாவிஷ்ணுவே இங்கு வழிபட்டதாக தல வரலாறு உள்ளது. இந்த கோயிலுக்கு வந்து வணங்கினால் நிச்சயம் ராகு – கேது தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கோயிலுக்கு ராகு காலத்தில் சென்று நாகலிங்க பூ, வில்வம் மற்றும் வன்னி இலை ஆகியவற்றுடன் தல விருட்சமான குரா மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி வணங்கினால் ராகு – கேது தோஷம் நீங்கும்.
காஞ்சி ஸ்ரீமாகாளீஸ்வரர் ஆலயம்:
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள ஜவஹர்லால் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீமாகாளீஸ்வரர் கோயில். தங்களின் பாவம் தீர ராகுவும், கேதுவும் இங்குள்ள மாகாளீஸ்வரரை வழிபட்டு பாவ விமோசனம் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. சிவபெருமான் ராகு – கேதுவை தனது பொற்கரங்களில் ஏந்தி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ராகு – கேது தோஷம் மட்டுமின்றி இந்த கோயிலில் வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகும்.
திருப்பாம்புரம்:
தமிழ்நாட்டில் கோயில்கள் நிறைந்த கும்பகோணத்தில் அமைந்துள்ளது திருப்பாம்புரம் திருக்கோயில். இந்த கோயிலில் ராகுவும், கேதுவும் ஒரே உருவமாக இருப்பதே தனிச்சிறப்பு ஆகும். எம்பெருமானான ஆதிசேஷனே இங்கு வந்து தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்டு விமோசனம் பெற்றதாக தல புராணம் கூறுகிறது. இங்கு வந்து வழிபட்டால் ராகு – கேது தோஷங்கள் நீங்கும்.
தேவர்குளம் ஸ்ரீசக்தி விநாயகர்:
நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ளது தேவர்குளம் அருகே உள்ள மூர்த்தீஸ்வரம். இங்குதான் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான் ராகு – கேதுவுடன் அருள் பாலிக்கிறார். இங்குள்ள விநாயகரை வணங்கினால் ராகு – கேது தோஷம் நீங்கும்.
திருமுருகன்பூண்டி:
திருப்பூர் அமைந்துள்ளது இந்த திருமுருகன்பூண்டி. தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் பெயரில் அமைந்துள்ள இந்த தலத்தில் வந்து வணங்கினால் ராகு – கேது தோஷம் நீங்கி சகல நன்மைகளும் கிட்டும். இந்த கோயிலில் ஒரு முறை முனிவரின் சாபத்துக்கு ஆளான கேது பகவான் துர்வாச தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீமாதவனேஸ்வரரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக தல புராணம் கூறுகிறது.
செங்காணி ஸ்ரீகோதபரமேஸ்வரர்:
நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த செங்காணி ஸ்ரீகோதபரமேஸ்வரர் ஆலயம். புகழ்பெற்ற இந்த கோயிலுக்கு வந்த சிவபெருமானை வணங்கினால் அனைத்து கவலைகளும் நீங்கி நன்மைகள் பெறலாம். இங்குள்ள ஸ்ரீகோதபரமேஸ்வரர் மட்டுமின்றி இந்த ஆலயத்தில் உள்ள அனைத்து தெய்வங்களை வணங்கினாலும் உங்கள் தோஷம் நீங்கும்.
ராகு – கேது தோஷம் உள்ளவர்கள் இந்த கோயில்களுக்கு சென்று வணங்கினால் நன்மை கிட்டும் என்பது ஐதீகம்.













