ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தொண்டாமுத்தூர் வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் இணைந்து ‘சத்குருவின் குடும்பத் திருவிழா’ என்னும் விழாவை மத்வராயபுரம் கிராமத்தில் நடத்தினர்.
சத்குருவை வாழ்த்திய ஆதினம்:
இதில் அருளுரை ஆற்றிய பேரூர் ஆதீனம் அவர்கள் பேசுகையில் “இளைஞர் பட்டாளம் நம் சமயத்திற்கும் இருக்கிறது என்று உலகிற்கு அறிவித்த பெருமை சத்குருவை சாரும்” எனக் கூறினார்.
இவ்விழாவில் வரவேற்புரை ஆற்றிய வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர் கிட்டுசாமி பேசுகையில், “ சத்குரு ஒரு தாய் போல் இருந்து இந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு முதல் பிரசவம், குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் வரை அனைத்தையும் சத்குரு எனும் மாமனிதர் செய்து வருகிறார்.” எனக் கூறினார்.
இளைஞர்கள் பட்டாளம்:
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் அருளுரையில்,”தமிழர் செய்நன்றி கடனை தெரிவிக்கும் தை மாதத்தில் சத்குருவிற்கு நன்றி தெரிவிக்கும் இந்த விழா நடைபெறுகிறது. தொண்டாமுத்தூர் பகுதியில் வேளாண்மை அழிந்து விடுமோ என்ற நிலையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை நிறுவி வேளாண்மைக்கு உறுதுணையாய் நின்றது ஈஷா அமைப்பு. சத்குரு காவேரி கூக்குரல் மற்றும் மண் காப்போம் இயக்கங்கள் மூலம் மண் வளம் மற்றும் நதிகளின் நலம் குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
வயதான காலத்தில் மட்டுமே ஆன்மீக மடங்களுக்கு மக்கள் சென்று கொண்டு இருந்த காலத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள் என பெரும் இளைஞர்கள் பட்டாளத்தை நம் சமயம் நோக்கி ஈர்த்து, இளைஞர் பட்டாளம் நம் சமயத்திற்கும் இருக்கிறது என்று உலகிற்கு அறிவித்த பெருமை சத்குருவை சாரும்.” எனக் கூறினார்.
இவ்விழா குறித்து சத்குரு பேசிய ஆடியோவில், “ நான் டெல்லியில் இருக்கிறேன். விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. தொண்டாமுத்தூர் பகுதி மக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் என் உயிரில் கலந்து விட்டீர்கள். குடும்பம் என்று சொல்லி விட்டீர்கள் ஆகையால் என் நோக்கமும் உங்கள் நோக்கமும் ஒன்றாகி விட்டது. விவசாயம் வேலை பிழைப்பு எல்லாம் இருக்கிறது, ஆனால் நமக்குள் இருக்கும் ஆன்மீகத்தை ஆன்மாவை ஓர் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். வெள்ளியங்கிரி அடிவாரத்தில் அருள் கொட்டி வருகிறது. இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” எனக் கூறினார்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசுகையில், “நம் தொண்டாமுத்தூர் பகுதியை ஆன்மீகம் மூலம் உலகம் அறியச் செய்தவர் சத்குரு. அவரின் ஆன்மீக மற்றும் சமூக நலப் பணிகளுக்கு நன்றி தெரிவிக்க கடமைபட்டு உள்ளோம்” எனக் கூறினார். இவ்விழாவில் தொண்டாமுத்தூர் வட்டாரத்தை சேர்ந்த 5000-க்கும் அதிகமான விவசாயிகள், கிராம மக்கள் மற்றும் பழங்குடி மக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் வானதி சீனிவாசன், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் செல்லமுத்து, நல்லறம் அறக்கட்டளை தலைவர் திரு. எஸ்.பி.அன்பரசன், செம்மேடு வேலுசாமி, மாதம்பட்டி தங்கவேலு உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கலைநிகழ்ச்சிகள்:
சந்தேகவுண்டன்பாளையம் கிராமத்தில் சத்குருவின் வழிக்காட்டுதலில் ஈஷா வித்யா பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தொண்டாமுத்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மற்றும் பழங்குடி மாணவர்கள் கல்வி உதவித் தொகையின் மூலம் இவலசமாக கல்வி பயின்று வருகின்றனர். அம்மாணவர்களின் நாட்டுபுற கலை நிகழ்ச்சிகள் விழாவிற்கு வந்தவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. அதே போல் சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி மாணவர்கள் தேவார பாடல்களைப் பாடினர்.
மேலும் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சங்கமம் கலைக் குழுவின் ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனுடன் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் இசை நிகழ்ச்சியும், சாய் கலாஷேத்ராவின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான ஈஷா பிரம்மச்சாரிகளுக்கு கிராம மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.














