உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று தரம்சாலாவில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி நியூசிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது, இதன்மூலம் 20 ஆண்டுகால சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதின.
ரோகித் – சுப்மன் சிறந்த தொடக்கம்:
இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் சரியாக அமையாவிட்டாலும் ரச்சின் ரவீந்திரா – மிட்செல் ஜோடி அபாரமாக ஆடியது. அவர்களால் அபாரமான ஆட்டத்தால் நியூசிலாந்து ஸ்கோர் மளமளவென எகிறியது. ஆனாலும், ஷமி, பும்ரா, சிராஜ் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சால் அவர்களால் 300 ரன்களை எட்ட முடியவில்லை. மிட்செல்லின் சத உதவியுடன் இந்திய அணிக்கு 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர். இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா – சுப்மன்கில் அபாரமான தொடக்கம் அளித்தனர்.
ரோகித் சர்மா 4 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 46 ரன்கள் எடுக்க, கில் 26 ரன்களில் அவுட்டானார். ஸ்ரேயாஸ் அய்யர் 33 ரன்களிலும், கே.எல்.ராகுல் 27 ரன்களிலும் ஆட்டமிழக்க, கோலி மட்டும் நங்கூரமாக களத்தில் நின்றார்.
கே.எல்.ராகுலுடன் ஆடிக் கொண்டிருந்தபோதே அரைசதத்தை கடந்த விராட்கோலி, இலக்கை நோக்கியும் தன்னுடைய 49வது சதத்தையும் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்.
கோலி அபாரம்:
அவருக்கு மறுமுனையில் ஜடேஜா மிகச்சிறந்த ஒத்துழைப்பை வழங்கினார். இதனால், இந்திய அணி இலக்கை நோக்கி நெருங்கியது. வெற்றிக்கு 5 ரன்களும், கோலியின் சதத்திற்கு 5 ரன்களும் தேவைப்பட்ட நிலையில் சதம் விளாசுவார் என்று ரசிகர்கள் மைதானத்தில் ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர்.
ஆனால், துரதிஷ்டவசமாக விராட்கோலி 95 ரன்களில் அவுட்டானார்.
ஹென்றி வீசிய பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்றபோது பிலிப்ஸ் கேட்ச் பிடித்துவிட்டார். ஆனாலும், இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்துவிட்டே வெளியே சென்ற விராட்கோலியை அரங்கமே எழுந்து நின்று பாராட்டியது. பின்னர், ஜடேஜா வெற்றிக்கு தேவையான பவுண்டரியை விளாசி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
சோகத்திற்கு முற்றுப்புள்ளி:
இந்த வெற்றி மூலம் 2003ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு நியூசிலாந்து அணியை உலகக் கோப்பையில் தோற்கடித்ததே இல்லை என்ற 20 ஆண்டுகால சோகத்திற்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஜடேஜா கடைசி வரை அவுட்டாகாமல் 39 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த வெற்றி மூலம் இந்திய அணி 5 போட்டிகளில் ஆடி 5 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுவிடும்.














