உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று இமாச்சல பிரதேசத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து ஆடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. இதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
நியூசிலாந்தை கட்டுப்படுத்திய ஷமி:
இதில் 300 ரன்களுக்கு மேல் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து அணியை ஷமி கட்டுப்படுத்தினார். இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வில் யங், ரச்சன் ரவீந்திரா, மிட்செல், சான்ட்னர், சான்ட்னர், ஹென்றி என அந்த அணியின் 5 பேரை அவுட்டாக்கினார்.
உலகக் கோப்பைத் தொடரில் ஷமி 5வது விக்கெட்டை வீழ்த்துவது இது 2வது முறையாகும். மேலும், 50 ஓவர் உலகக் கோப்பையில் 5 விக்கெட்டுகளை 2 முறை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த 4 போட்டிகளில் உட்கார வைக்கப்பட்ட ஷமி இந்த போட்டி மூலம், மிகச்சவாலான நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
முதல் இந்தியர்:
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 2 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 9வது வீரர் என்ற பெருமையை சர்வதேச அரங்கில் பெற்றுள்ளார். ஷமி தவிர இந்திய வீரர்கள் நெஹ்ரா ( 2003), வெங்கடேஷ் பிரசாத் (1999), ராபின்சிங் (1999) யுவராஜ்சிங் (2011) மற்றும் கபில்தேவ் (1983) ஆகிய வீரர்கள் உலகக் கோப்பையில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இன்றைய போட்டியில் ஷமி வில் யங்கை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முதல் இடத்தில் ஜாகிர்கான், ஸ்ரீநாத் 44 விக்கெட்டுகளுடன் உள்ளனர். ஷமி 36 விக்கெட்டுகளுடன் 3வது இடத்தில் உள்ளார். 4வது இடத்தில் கும்ப்ளே 31 விக்கெட்டுகளுடன் உள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஷமி கடந்த 2019ம் ஆண்டு உலகக் கோப்பையில் 4 போட்டிகளில் மட்டுமே ஆடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.














