தமிழ்நாட்டை கட்டமைத்ததில் திராவிட கட்சிகளின் பங்கு தவிர்க்கவே முடியாதது. தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ திராவிட கட்சிகளின் அடிப்படை சித்தாந்தத்தில் ஒன்று இந்தி திணிப்பு எதிர்ப்பு. இன்றும் அந்த கோரிக்கையை மிக ஆழமாக எதிர்த்து வரும் கட்சியாக தமிழ்நாட்டில் பார்க்கப்படுவது தி.மு.க.
இந்தி திணிப்பு எதிர்ப்பு:
தற்போது வரை மத்திய அரசு ஏதேனும் திட்டத்தில் தமிழை தவிர்த்தாலோ, இந்தியை திணித்தாலே இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மேற்கோள் காட்டி கடுமையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மற்ற தி.மு.க.வினரும் எதிர்ப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே அதன் சாராம்சம் ஆகும்.
அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்காக இந்தியா கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றுள்ளது. இதற்காக, இந்தியா கூட்டணியின் அரசியல் தலைவர்கள் அவ்வப்போது கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி, நெல்லை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சியின் அரசியல் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
வாயை மூடி வேடிக்கை பார்த்த மு.க.ஸ்டாலின்:
அந்த கூட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள பா.ஜ.க.விற்கு எதிரான எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்த நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இந்தியில் பேசியதை மொழி பெயர்த்து சொல்லுமாறு தி.மு.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு கூறினார்.
அதற்கு, நிதிஷ்குமாரோ மிக கடுமையான கோபத்துடன் இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றும், நீங்கள் அதை கற்க வேண்டும் என்றும் கோபமாக கூறியதுடன் தனது கட்சியின் மனோஜ் ஜா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தையும் நிறுத்துமாறு கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்த கூட்டத்திலே இந்தி தேசிய மொழி என்று சக முதலமைச்சர் ஒருவர் ஆவேசமாக பேசிய பிறகும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் எதுவும் பேசாமல் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இது நியாயமா?
இந்த வீடியோவும், இந்த சம்பவமும் தற்போது இணையத்தில் தீயாய் பரவிக்கொண்டிருக்கிறது. நிதிஷ்குமாரின் செயலுக்கு அப்போதே கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் வெளியேறாதது ஏன்? கட்சியின் அடிப்படை கொள்கையை விடுத்து அரசியல் கூட்டணி முக்கியமா? இந்தி திணிப்பு எதிர்ப்பு எல்லாம் இங்கு மட்டும்தானா? என்று மு.க.ஸ்டாலினுக்கு சரமாரியாக இணையத்தில் விமர்சனத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தி திணிப்பு எதிர்ப்பை கட்சி பேதமின்றி பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், அரசியல் கட்சியின் கூட்டணிக்காக தி.மு.க.வின் தலைவரே இந்தி தேசிய மொழி என்ற வாதத்திற்கு அமைதியாக இருந்து விட்டு வந்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மேலும் இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.














