தமிழ் சினிமாவின் வெற்றிகரமான நடிகராக உலா வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள லியோ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அஜித்துடனான போட்டி என்பது தற்போது விஜய் ரசிகர்களால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடனான மோதல் என்று மாறியுள்ளது. மேலும், ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய காகா கழுகு கதை ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
லியோ:
இந்த நிலையில், வரும் 10-ந் தேதி லியோ படம் வெளியாக உள்ள நிலையில், லியோ ஆடியோ லாஞ்சை வரும் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் படத்தை விட விஜய் படத்தின் ஆடியோ லாஞ்சிற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அரசியல் பணியில் முழு தீவிரம் காட்டி வரும் விஜய் ஒவ்வொரு ஆடியோ லாஞ்சிலும் தனது பேச்சின் மூலம் அதை இன்னும் பரபரப்பாக்கி வருகிறார்.
இந்த நிலையில், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார் என்பது பரபரப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் நடிகர் ரஜினிகாந்த் சொன்ன காகா – கழுகு கதைக்கு பதில் கதை கூறுவாரா? தன்னுடைய அரசியல் வருகைக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அளவிற்கு புதிய அதிரடியை தருவாரா? அல்லது சூப்பர்ஸ்டார் பட்டம், அரசியல் என அனைத்திற்கும் பதிலடி தருவாரா? என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரசியல் களம்:
நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வானது அடுத்த சட்டமன்ற தேர்தலிலே அவர் நேரடி அரசியல் களத்தில் குதிப்பதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பணி இயக்கத்தின் தீவிர செயல்பாடுகள், அடிக்கடி நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தை கவனித்தாலே விஜய்யின் செயல்பாடுகளை நாம் அறிய முடியும்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அரசியலில் தீவிர கவனம் செலுத்த இருப்பதாலும், சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே இருப்பதாலும் அவர் இன்னும் இரண்டு, மூன்று படங்களில் மட்டுமே நடிப்பார் என்ற தகவல்களும் வெளியாகி வருகிறது.
நிச்சயமாக, லியோ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் மட்டும் எந்த சந்தேகமும் இல்லை.














