பொங்கல் பண்டிகைக்கு நிகராக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றாக கார்த்திகை தீபம் விளங்குகிறது. கார்த்திகை தீபம் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது உலகப்புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு ஏற்றப்படும் தீபம் ஆகும்.
கார்த்திகை தீபம்:
நடப்பாண்டிற்கான கார்த்திகை தீபம் இன்று கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயி் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. வேதங்கள் முழங்க, விண்ணைப் பிளக்கும் சிவாய கோஷத்துடன் அதிகாலை 3.40 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபம் ஏற்றப்பட்ட போது, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
பரணி தீபம் கோயிலில் அதிகாலை ஏற்றப்பட்ட நிலையில், இன்று மாலை 6 மணியளவில் மலையில் தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த தீபத்தை காண இன்று திருவண்ணாமலை முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நேற்று முதலே பக்தர்கள் அலையில் காட்சி தரும் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
மகாதீபம்:
2 ஆயிரத்து 668 அடி உயரத்தில் உள்ள மலை மீது ஏற்றப்படும் மகா தீப தரிசனத்தை நேரில் காண ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகே தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் விளக்குகள் ஏற்றப்படும். இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு ஆராதனைகளும், வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது.
அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணைப் பிளக்கும் வகையில் மாலை மகாதீபம் ஏற்றப்பட உள்ளதால், திருவண்ணாமலை முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மேலும், சிவாலயங்கள் மட்டுமின்றி முருகன் கோயில்களிலும் சிறப்பு தரிசனங்களும், வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது.













