சென்னை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி மைதானத்தில் தி.மு.க. சார்பில் மகளிர் உரிமை மாநாடு இன்று நடத்தப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்பட நாட்டின் பல முக்கியமான பெண் தலைவர்களும், இந்தியா கூட்டணி தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
மகளிர் உரிமை மாநாடு:
இதற்காக, சோனியாகாந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் நேற்றே சென்னை வந்துவிட்டனர். இந்த நிலையில், இன்று விழா ஏற்பாட்டை கனிமொழி எம்.பி. நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது, “இந்த மகளிர் உரிமை மாநாட்டில் பெண் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய பாஜக, நாடு முழுவதும் மக்களிடையே காழ்ப்புணர்வு அரசியலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு
தற்போது வரை மணிப்பூரில் அதிகமாக பாதிக்கப்பட்டோர் பெண்கள் தான். அரசியல் காரணத்திற்காக பாஜக-வினர் மக்களிடயே விரோதத்தை ஏற்படுத்துகிறார்கள். பாஜக ஆட்சியால் இந்தியாவில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலாக உள்ளது
பெண்களின் குரலை மையப்படுத்தக்கூடிய விதமாக இந்த மகளிர் உரிமை மாநாடு அமையும். இந்த நாட்டில் சரிசமமாக இருக்கக்கூடிய வாக்காளர்களாக பெண்களும் உள்ளார்கள். பெண்களை முன்னிலைப்படுத்துவதற்கும், ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இந்த மாநாடு உதவிகரமாக அமையும். இந்த மகளிர் உரிமை மாநாடு தேர்தலுக்கு ஒரு முக்கிய பங்காக இருக்கும்” இவ்வாறு அவர் கூறினார்.
இன்று நடைபெறும் மாநாட்டின் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டில் முதலமைச்சர் உள்பட பலரும் பங்கேற்க உள்ளனர்.













