சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியை நேற்று இந்தி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்தியாவின் வெற்றியைக் காட்டிலும் விராட் கோலி சதம் அடித்து மீண்டும் தனது ஃபார்முக்குத் திரும்பியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விராட் கோலி நேற்றைய போட்டியில் சதம் மட்டுமின்றி ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார்.
14 ஆயிரம் ரன்கள்:
நேற்றைய போட்டியில் விராட் கோலி 15 ரன்களை எட்டியபோது சர்வதேச கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற மகத்தான சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், குமார் சங்ககரா மட்டுமே இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக:
1.விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்தியர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன்பு 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் சர்மா 91 ரன்கள் அடித்ததே அதிக ரன்களாக இருந்தது. மேலும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்தியர் என்ற வரலாற்றையும் விராட் கோலி படைத்துள்ளார்.
2. மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். அவர் இதுவரை 224 ரன்கள் அடித்துள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனையை சனத் ஜெயசூர்யா 189 ரன்களுடன் தன்வசம் வைத்திருந்தார்.
3. பாகிஸ்தான் அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் ஒட்டுமொத்த அளவில் விராட் கோலி வைத்துள்ளார். அவர் 433 ரன்கள் விளாசியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா 370 ரன்களுடனும், சச்சின் 321 ரன்களுடனும், டேவிட் வார்னர் 294 ரன்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.
4. ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5வது முறையாக ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார் விராட் கோலி. ஐசிசி தொடர்களில் எந்த ஒரு வீரரும் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக 3 முறை கூட ஆட்டநாயகன் விருது வாங்கியதில்லை.
5 . விராட் கோலி இதுவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக 17 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் மொத்தமாக 778 ரன்கள் அடித்துள்ளார். அதில் 4 சதங்கள், 2 அரைசதங்கள் அடங்கும். 4 முறை ஆட்டமிழக்காமல் ஆடியுள்ளார். அதிகபட்சமாக 183 ரன்கள் விளாசியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக தன்னுடைய ஸ்ட்ரைக் ரேட் 95.70 ஆக வைத்துள்ளார்.














