டி20 கிரிக்கெட்டில் எப்போதும் மிரட்டலாக பேட்டிங் செய்வதில் தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு என்று தனி இடம் உண்டு. அந்த வகையில், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனும், ஆர்.சி.பி. அணியின் கேப்டனுமாகிய டுப்ளிசிஸ்க்கு தனி இடம் உண்டு.
தற்போது டுப்ளிசிஸ் அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட்டில் ஆடி வருகிறார். மோரீஸ்வில்லில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும், வாஷிங்டன் ப்ரீடம் அணியும் மோதின.
டுப்ளிசிஸ் சதம்:
இதில், முதலில் பேட் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டன் டுப்ளிசிஸ் – கான்வே களமிறங்கினர். களமிறங்கியது முதலே டுப்ளிசிஸ் பட்டாசாய் வெடித்தார். ஜான்சன், நெட்ரவாக்கர் அகீல் ஹோசைன், பெர்குசன் என ஒவ்வொருவரின் பந்துவீச்சையும் வெளுத்து வாங்கினார். அவரை அவுட்டாக்க வாஷிங்டன் அணி எடுத்த முயற்சிகள் எதுவுமே கைகொடுக்கவில்லை.
பவுண்டரி, சிக்ஸர் என விளாசிய டுப்ளிசிஸ் 57 பந்துகளில் அபார சதம் விளாசினார். அவர் கடைசியாக 58 பந்துகளில் 12 பவுண்டரி 5 சிக்ஸருடன் 100 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். கடைசியில் டெக்சாஸ் அணி 20 ஓவர்களில் 203 ரன்களை எடுத்தது. கான்வே 39 ரன்களும், ஸ்டோய்னிஸ் 29 ரன்களும் எடுத்தனர்.
39 வயதிலும் மிரட்டல்:
204 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வாஷிங்டன் அணி 4 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. 39 வயதிலும் மிரட்டலான சதம் அடித்த டுப்ளிசிஸ்க்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.













