இன்று பெரும்பாலான மக்களின் வாழ்க்கைப் பழக்கவழக்கங்களும், உணவுப்பழக்கங்களும் மாறியுள்ளது. அதில், மிகவும் முக்கியமானது காலையில் எழுந்திருக்கும் நேரம். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு காலை 4, 5 மணிக்கே மக்கள் எழுந்துவிடுவது வழக்கம். இரவில் அதிகபட்சம் 8 மணிக்குள் உறங்கச் சென்று விடுவார்கள்.
இந்த நேரமானது இன்று படிப்படியாக மாறி 7 மணி வரை மாறியுள்ளது. அதுவும், சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் காலையில் 10 மணிக்கு எழுந்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்றும் தமிழ்நாட்டின் பெரும்பாலான கிராமங்களில் அதிகபட்சம் காலை 7 மணிக்கே மக்கள் பரப்பாகிவிடுவார்கள்.
காலை 8, 9 மணிக்கு மக்கள் எழுந்திருப்பதற்கு காரணம் அவர்கள் பார்க்கும் வேலையும் ஒரு காரணம் ஆகும். ஆனால், காலையில் விரைவாக எழுந்திருப்பது மனதிற்கும், உடலுக்கும் ஏராளமான நன்மைகளைத் தரும்.
அதிக நேரம்:
காலையில் 6 அல்லது 7 மணிக்கே எழுந்து குளித்து தயாராவதால் நமக்கு நிகழும் முதல் நன்மை. அந்த நாளில் எஞ்சிய நேரம் முழுவதும் நம் கண் முன் இருக்கும் முதல் நல்ல விஷயம். இதனால், அந்த நேரத்தில் நாம் வழக்கமாக செய்யும் காரியங்களை விட அதிக காரியங்களைச் செயய முடியும். நம்மால் புதியதாக ஒரு காரியத்தைச் செய்யவோ, வெளியில் பயணிக்க, புதியதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளவோ முடியும். ஏனென்றால், நேரம்தான் ஆகச்சிறந்த முதலீடு.
புத்துணர்ச்சி:
காலையில் எழுந்து 8 மணிக்குள் தயார் ஆகும் நபர்களின் புத்துணர்ச்சியானது தாமதமாக எழுந்து தயார் ஆகும் நபர்களின் புத்துணர்ச்சியை விட அதிகமாக இருக்கும். அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள்.
உடல் ஆரோக்கியம்:
காலையில் தாமதமாக எழுபவர்களில் பெரும்பாலானோர் தங்களது காலை உணவை சாப்பிடுவதில்லை. இளம் வயதில் காலை உணவை தவிர்ப்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய சிக்கலில் தள்ளிவிடும். உடல் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே எதையும் எதிர்கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தே மன தைரியம் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேர்மறை எண்ணங்கள்:
காலையிலே எழுந்து தயாராகும்போது நம்மையும் மீறி நமக்குள் நேர்மறை எண்ணங்கள் உதிக்கும். ஏராளமான நேர்மறையான எண்ணங்கள் உதிக்கும்போது நாம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கும்.
உடற்பயிற்சி:
அதிகாலையில் எழுவதன் மூலம் நமக்கு உடற்பயிற்சி செய்ய போதுமான நேரம் கிட்டும். ஏனென்றால், உடல்நலத்தைப் பராமரிக்க விரும்புபவர்கள் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். அவ்வாறு உடற்பயிற்சி செய்வதற்கு காலை நேரம் மிகச்சிறந்தது ஆகும்.
தொழில்துறை, விளையாட்டு, திரையுலகம் என நீங்கள் எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் அந்த துறையில் சாதித்த பலரும் அதிகாலையிலே எழுந்து தங்கள் பணியைத் தொடங்கியவர்கள் ஆவார்கள்.














