தமிழ்நாடு அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளே ஆட்சி அமைத்து வந்த நிலையில், இந்த கட்சிகளுக்கு சவால் அளிக்கும் வகையில் அவ்வப்போது புதிய கட்சிகள் தொடங்கினாலும், தற்போது புதிய கட்சி தொடங்கி தி.மு.க.விற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருப்பவர் விஜய்.
அரசியல் எதிரி தி.மு.க., கொள்கை எதிரி பா.ஜ.க.
தமிழ் திரையுலகின் உச்சபட்ச நடிகரான விஜய்க்கு தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நீண்ட வருடங்களாகவே அரசியல் மீது ஆர்வம் கொண்டிருந்த விஜய், ஜெயலலிதா கருணாநிதி ஆகிய இரு பெரும் ஆளுமைகளின் மறைவிற்கு பிறகு தனது அரசியல் வருகைக்கான பணியைத் தீவிரப்படுத்தினார்.
அதன் எதிரொலியாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய விஜய், விக்கிரவாண்டி அரசியல் மாநாடு வரை அரசியலில் தனது கொள்கைகள், கோட்பாடுகள் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். விக்கிரவாண்டியில் நடந்த தவெக-வின் முதல் மாநாட்டிற்கு பிறகு நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் எதிரி தி.மு.க.வே என்று திட்டவட்டமாக அறிவித்தார். வெளிப்படையாக திமுக என்று கூறாவிட்டாலும் திராவிட மாடல் என்று தி.மு.க.வை சாடினார்.
விஜய்யின் கூட்டணி அஸ்திரம்:
தமிழ்நாட்டில் இனி தனித்து ஆட்சி அமைப்பது சாத்தியமற்றது என்பதை உணர்ந்த விஜய், கூட்டணிக்கான முன்னேற்பாடாக தி.மு.க. கூட்டணியை உடைக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளார். அதற்கான முதல் அஸ்திரமாக அவர் வீசியதுதான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதாகும். விசிக தலைவர் திருமாவளவனின் நீண்ட நாட்கள் கோரிக்கையான இந்த கோரிக்கையை விஜய் வெளிப்படையாக மேடையில் அறிவித்தபோதே அவர் திருமாவளவனை தன் பக்கம் இழுக்க நினைக்கிறார் என்பது அப்பட்டமானது.
ஆதவ் அர்ஜூனாவை வைத்து அவர் அடுத்தடுத்து நகர்த்திய அரசியல் நகர்வின் வெளிப்பாடே இன்று ஆதவ் அர்ஜூனா விசிகவை விட்டு வெளியேறியது ஆகும். இந்த நிலையில், 2026ம் ஆண்டு அரசியல் களமானது துணை முதலமைச்சர் உதயநிதி vs விஜய் என்றே இருக்கும் என்றே அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர். இதுவரை விஜய்யை தி.மு.க.வின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தவிர பிற கட்சியின் தலைவர்களோ, நிர்வாகிகளோ வெளிப்படையாக விமர்சிக்கவில்லை.
உதய், தி.மு.க.வின் மைனஸ்:
ஏனென்றால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஜய்யின் கூட்டணி சலுகை, எந்த கட்சியும் கொடுக்க முன்வராதது ஆகும். மேலும், அவர் இதுவரை தி.மு.க., பா.ஜ.க.,வைத் தவிர தமிழகத்தில் பெரும் கட்சிகளான காங்கிரஸ் வாக்கு வங்கிகளை அதிகம் வைத்துள்ள பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் போன்ற கட்சிகளை எந்த இடத்திலும் விமர்சிக்கவில்லை. ஏனென்றால், 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிகள் வேண்டுமானாலும் விஜய்யின் பக்கம் கைகோர்ப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் ஆகும்.
மேலும், எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற முதல்முறையிலே 4 ஆண்டுகளிலே துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது, தி.மு.க.வின் முக்கிய முடிவுகள் உதயநிதி ஸ்டாலினை மையப்படுத்தியே எடுக்கப்படுவதும் கருணாநிதி காலம் முழுவதும் அரசியல் களத்தில் இருக்கும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுக் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் பலவும் நிறைவேற்றப்படாமல் இருப்பது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தி.மு.க. அரசின் மீது அதிருப்தியில் இருப்பதும் தி.மு.க.விற்கு பின்னடைவாக உள்ளது.
உதயக்கு சவாலா?
முதல் தலைமுறையின் வாக்காளர்கள் பலரும் விஜயின் ரசிகர்களாக இருப்பது அவருக்கு பலமாக உள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாகவும் விஜய் இருப்பது அவருக்கு பக்கபலமாக இருக்கிறது. ஆனால், அந்த அம்சம் மட்டுமே அவருக்கு வாக்குகளாக மாறுமா? என்றால் அதற்கு அது போதாது என்பதே உண்மை. பெஞ்சல் புயல் போன்ற பெரும் பாதிப்பிற்கு வீட்டை விட்டு விஜய் வெளியில் வராமல் இருப்பது. அடிக்கடி மக்களைச் சந்திக்காமல் இருப்பது அவருக்கு பின்னடைவாக உள்ளது.
பொதுவெளியில் பத்திரிகையாளர்களை அவர் அணுகப்போகும் முறை, பத்திரிகையாளர் சந்திப்பு, மக்கள் சந்திப்பின்போது அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவர் அளிக்கப்போகும் பதில்கள் ஆகியவற்றுடன் ஒரு துடிப்பான அரசியல்வாதியாக தன்னை விஜய் 2025ம் ஆண்டு நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதை அவர் நிரூபித்தால் மட்டுமே அவர் பின்னால் கைகோர்க்க மற்ற கட்சியினர் சேர்வார்கள்.
தி.மு.க.வை பாதிக்குமா?
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தனிப்பட்ட செல்வாக்கிற்காக குறிப்பிட்ட சதவீத வாக்குகள் விழும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த வாக்குகள் உதயநிதி ஸ்டாலினையும், தி.மு.க.வையும் பாதிக்கும் என்பதும் உண்மை.
உதயநிதியை முன்னெடுத்தே 2026 சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க தி.மு.க. தயாராகி வரும் நிலையில், விஜய்யின் அடுத்த ஓராண்டு செயல்பாடுகள் மக்களை கவரும் வகையில் அமைந்து தன்னுடன் வட மற்றும் தென்மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்ட கூட்டணியை அமைத்து அவர் தேர்தலைச் சந்தித்தால் நிச்சயம் அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அந்த தாக்கம் வரும் சட்டமன்ற தேர்தலில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அதற்கு அடுத்தடுத்த தேர்தலில் அவருக்கான செல்வாக்கை அதிகரிக்க கைகொடுக்கும்.













