தீபாவளி பண்டிகை என்றாலே உற்சாகம் அனைவருக்கும் கரை புரண்டு விடும் என்றே சொல்லலாம். புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் என்று ஒவ்வொன்றும் தீபாவளி தினத்தில் மக்களை மகிழ்விப்பது போல புத்தம் புதிய திரைப்படங்களும் தீபாவளிக்கு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தீபாவளிக்கு ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், மலையாளத்தில் வெளியாகும் படங்களின் பட்டியலை கீழே காணலாம்.
தி மார்வல்: (நவ.10)
உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட திரைப்பட வரிசைகளை கொண்டது மார்வல். அவெஞ்சர்ஸ் எண்ட் கேமிற்கு பிறகு மார்வல் ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் எந்த படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில், வரும் 10-ந் தேதி தி மார்வல்ஸ் வெளியாக உள்ளது. சூப்பர் ஹீரோக்கள் கதையே அடிப்படை கதையாக அமைந்துள்ளது. ப்ரீ லார்சன், இமான் வெல்லானி, டெய்னா பாரீஸ், லஷான லிஞ்ச், சாமுவேல் ஜாக்சன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
டைகர் 3: (நவ.12)
பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான் கானின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டைகர் 3. மணீஷ் சர்மா இயக்கியுள்ள இந்த படத்தில் கத்ரீனா கைப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டைகர், டைகர் 2 பட வரிசையில் இது வெளியாகிறது, வார், பதான் படங்களின் தொடர்ச்சியாகவும் இது அமைந்துள்ளது.
ஜப்பான்: (நவ.10)
நடிகர் கார்த்தியின் நடிப்பில் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் ஜப்பான் ஆகும். கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். இவர்களுடன் சுனில் உள்பட பலர் நடித்துள்ளனர். 200 கோடி கொள்ளையை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (நவ.10)
நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். கார்த்திக் சுப்பராஜின் பிரம்மாண்ட வெற்றிப்படமான ஜிகர்தண்டா படத்தை 1975 காலகட்டத்தில் எடுப்பது போல மீண்டும் எடுத்துள்ளார். ட்ரெயிலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி: (நவ.11)
இரா.வெங்கட் இயக்கத்தில் பூ ராம், காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தீபாவளி. குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள இந்த படமும் தீபாவளி விருந்தாக வருகிறது.
பந்த்ரா: (நவ.10)
மலையாள உலகின் முன்னணி நடிகர் திலீப் நடிப்பில் வெளியாக உள்ள படம் பந்த்ரா. தமன்னா, சரத்குமார், சுரேஷ் மேனன், மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளனர். இந்த படத்தை அருண் கோபி இயக்கியுள்ளார்.
பாலிமி: (நவ.10)
பாசில் ஜோசப்பின் இயக்கத்தில் வெளியாகும் மலையாள படம் பாலிமி. ஜெகதீஷ், மஞ்சு பிள்ளை, சந்தீப் பிரதீப் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.













