உறுப்புமாற்று சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற ரேலா மருத்துவமனை, நுரையீரல் உறுப்பிடை நார்த்திசு (ILD) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்த குஜராத்தைச் சேர்ந்த 42 வயது பெண்மணிக்கு மிகவும் சிக்கலான இரட்டை நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது.
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை:
புறாக்களின் எச்சங்கள் காரணமாக நார்த்திசு நுரையீரல் ஏற்படுகிறது. புறாக்களின் கழிவுகள், எச்சங்களினால் ஏற்படுகின்ற புறா வளர்ப்பவர்களின் நுரையீரல் நோய் அல்லது மிகைஉணர்திறன் மூச்சுப்பை அழற்சி எனவும் இந்நோய் அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில், குஜராத்தைச் சேர்ந்த 42 வயதே நிரம்பிய திம்பால் ஷா என்ற பெண்ணுக்கு இரு பக்க நுரையீரலும் இந்த நோயால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் சென்னையிலுள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தாரால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
8 மணி நேர அறுவை சிகிச்சை
மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில், அவருக்கு இருபக்க நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சையை செய்ய ரேலா மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. சமீபத்தில் உயிரிழந்த 19 வயதான ஒரு இளம் பெண்ணின் ஆரோக்கியமான ஒரு ஜோடி நுரையீரல்களை திம்பால்ஷாவிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
மிகவும் சிக்கலனா இரு பக்க நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை ரேலா மருத்துவர்கள் திறம்பட செய்து முடித்தனர். 8 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையை 14 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் செய்தனர். நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சையில் உலகளவில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருப்பதன் சிறப்பை இந்த அறுவை சிகிச்சையின் வெற்றி உணர்த்தியது.
ரேலா மருத்துவமனையின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் முகமது ரேலா இது தொடர்பாக கூறியதாவது, “ரேலா மருத்துவமனையில் திம்பால் ஷா க்கு செய்யப்பட்டிருக்கும் வெற்றிகரமான இரட்டை நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை, நோயாளிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஆகிய இருதரப்பினரின் தளராத மனஉறுதிக்கும், மற்றும் மருத்துவர்களின் நிபுணத்துவத்திற்கும் சாட்சியமாக இருக்கிறது. கடுமையான சோதனையும், சோகமும் எதிர்கொள்கின்ற போதிலும் உறுப்புதானம் என்ற தன்னலமற்ற தியாகம், இருள் சூழ்ந்த சூழ்நிலைகளிலும் கூட நம்பிக்கை தீபத்தை ஏற்றி வாழ்க்கைக்கு புத்துயிரை வழங்கியிருக்கிறது என்பது நாம் அனைவரும் நினைவில் நிறுத்தவேண்டிய அம்சமாகும். தூய்மையான சுற்றுச்சூழலை நாம் பராமரிப்பது முக்கியம்.” என்று அவர் மேலும் கூறினார்.
ரேலா மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை துறையின் கிளினிக்கல் லீட் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். ஆர். மோகன் பேசுகையில், “வழக்கமான மருந்துகளும், சிகிச்சை முறைகளும் இனிமேலும் பயனளிக்காத கடும் பாதிப்பு நிலையை திம்பால்ஷாவின் உடல்நிலை எட்டியிருந்தது. உடலிலிருந்து கரியமில வாயுவை அகற்றுவதில் அப்பெண்ணின் நுரையீரல்கள் கடும் சிரமப்பட்டதன் காரணமாக, உறுப்புமாற்று சிகிச்சையை இவருக்கு உடனடியாக செய்வது அவசியமாக இருந்தது.” என்று விளக்கமளித்தார்.
வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட திம்பால்ஷா “வாழ்க்கையை எனக்கு திரும்பவும் தந்திருப்பதற்காக நான் என்றும் நன்றியுள்ளவராக இருப்பேன். எனக்கு செய்யப்பட்ட இந்த அறுவைசிகிச்சை, வெற்றிகரமாக அமைந்ததால் ஒவ்வொரு நாளும் படிப்படியாக நான் வலுப்பெற்று வருகிறேன். முழுமையாக குணமடைந்ததற்குப் பிறகு ஏறக்குறைய ஒரு இயல்பு வாழ்க்கையை வாழத்தொடங்கும் நாளுக்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன்.” என்று கூறினார்.














