சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கோப்பையை வெல்லப்போவது இந்தியாவா? நியூசிலாந்தா? என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரியவரும். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
கவலை தரும் கில்:
இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை ரோகித் அதிரடியான தொடக்கத்தை அளித்துவிட்டுச் செல்கிறார். அதன்பின்பு, விராட் கோலி, அக்ஷர் படேல், ஸ்ரேயஸ், பாண்ட்யா, கே.எல்.ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், இந்திய அணியின் பேட்டிங்கில் சுப்மன்கில் பேட்டிங் கவலை அளித்து வருகிறது.
அடுத்த கோலி என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டு வந்த சுப்மன்கில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக சதம் விளாசினார். ஆனால், அதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் பாகிஸ்தான், நியூசிலாந்து, அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக சொற்ப ரன்களில் அவுட்டானார்.
துணை கேப்டன் இப்படி ஆடலாமா?
ஐசிசி நடத்தும் தொடர்களில் இதுவரை சுப்மன்கில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக சிறப்பாக ஆடியதில்லை என்றே புள்ளிவிவரங்கள் கூறுகிறது. அதை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் கில் உள்ளார்.
துணை கேப்டன் சுப்மன்கில் இதுவரை மேலே கூறிய அணிகளுக்கு எதிராக ஐசிசி தொடர்களில் 9 இன்னிங்சில் ஆடி 214 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில் 1 அரைசதம் மட்டுமே அடங்கும். 26.75 ரன்களே சராசரி ஆகும். ஆனால், மற்ற அணிகளுக்கு எதிராக இந்த ஐசிசி தொடர்களில் 4 இன்னிங்சில் 3 அரைசதம், 1 சதம் என 297 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 99 ஆகும்.
கம்பேக் தருவாரா?
நியூசிலாந்து போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ஒவ்வொரு வீரரும் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். துபாய் மைதானத்தில் இந்திய அணி ஆடி அனுபவம் கொண்ட நிலையில், சுப்மன்கில் இதுவரை ஆடிய போட்டிகளின் அனுபவத்தை கொண்டு சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும்.
நியூசிலாந்து அணியில் மேத் ஹென்றி, வில்லியம் ஓ ரோர்க்கி, ப்ராஸ்வெல், சான்ட்னர், பிலிப்ஸ், ஜேமிசன் என சுழல், வேகம் கலந்த கலவையாக உள்ளனர். அவர்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டியது இந்திய அணிக்கு முக்கியம் ஆகும். மேலும், 2000ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி தோல்விக்கு இந்திய அணியும், 2023ம் ஆண்டு அரையிறுதிப் போட்டி தோல்விக்கு நியூசிலாந்து அணியும் பழி தீர்க்க களமிறங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.














