உலகில் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். வெளிநாடுகளில் பிக் பிரதர் என்ற பெயரில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் இந்தியாவில் பிக்பாஸ் என்ற பெயரில் இந்தியில் முதன்முதலில் அறிமுகமானது. பின்னர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ்:
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தொடருக்கு என்றே லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 7வது சீசனாக ஒளிபரப்பாகும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிக மிக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ஏனென்றால், இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு வெறுப்புகளும், வன்மங்களும், தனிநபர் மீதான வார்த்தை தாக்குதலும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
கமலுக்கு குவிந்த கண்டனங்கள்:
பிரதீப் ஆண்டனியால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சில பெண்கள் உரிமைக்குரல் எழுப்பியதும் கமல்ஹாசன் அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிய நிகழ்வுக்கு பிறகு, கமல்ஹாசனுக்கு எதிராகவே குரல்கள் வலுக்கத் தொடங்கியது. ட்விட்டரில் தீர விசாரிப்பதே மெய் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. பிரதீப் செய்தது தவறு என்று அவர் மீது குற்றம் சாட்டிய பெண்கள் தொடர்ந்து கூறி வரும் சூழலில், இணையத்தில் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
புல்லி கேங் அட்டூழியம்:
இந்த சூழலில், பிரதீப் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து பிரதீப் ஆண்டனி விவகாரம் தொடர்பாகவும், இன்னும் சில காரணங்களுக்காகவும் பிக்பாஸ் வீட்டில் தினசரி வார்த்தை மோதல்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, மாயா தலைமையில் ஐஸ்வர்யா, ஜோவிகா, பூர்ணிமா ஆகியோர் கும்பலாக சேர்ந்து ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருக்கும் விசித்ரா மற்றும் அர்ச்சனாவை தொடர்ந்து சரமாரியாக சீண்டி வருவது பார்க்கும் ரசிகர்களுக்கே பெரும் எரிச்சலையும், ஆத்திரத்தையும் உண்டாக்கி வருகிறது என்பதை சமூக வலைதளங்களில் வரும் மீம்ஸ்கள் மூலம் அறிய முடிகிறது.
குழந்தைகள் பார்க்கும் தொடர், இளைஞர்கள் பார்க்கும் நிகழ்ச்சி, குடும்பங்கள் பார்க்கிறார்கள் என்று கமல்ஹாசனால் அடிக்கடி கூறப்படும் இந்த பிக்பாஸ் சீசன் 7 இன்று வரை அதிகளவில் கற்றுக்கொடுத்தது சண்டையிடுவது எப்படி? ஒருவரை கும்பலாக சேர்ந்து கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாக்குவது எப்படி? என்பதே ஆகும் என்பதே அதை தொடர்ந்து பார்ப்பவர்களால் உணர முடியும்.
வன்முறை, வெறுப்புணர்வு:
மாயா மற்றும் அவர் தலைமையிலான கும்பல் அர்ச்சனாவை சைக்கோ, மனநல பிரச்சினை உள்ளவர் என்று தொடர்ந்து அதே வார்த்தையால் வதைத்து வருவதும், அவரை தொடர்ந்து சீண்டி வருவதும் ஒரு ஆரோக்கியமான போக்கு அல்ல. இந்த காட்சிகளை பார்க்கும் சிலருக்குள் இது தவறாக விதைக்கப்பட்டால் அதன் விளைவு தற்கொலை, கொலை, வன்முறை என்றே முடியும்.
ஜோவிகாவின் நடவடிக்கையை பார்த்து அவரது தாய் வனிதாவே கோபப்பட்டு வரும் சூழலில், ஜோவிகாவின் செயல்பாடு அவரது எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்று பலரும் எச்சரித்து வருகின்றனர். பிரதீப் விவகாரத்தில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ள கமல்ஹாசன் இந்த புல்லி கேங் விவகாரத்திலும், மாயாவின் மோசமான செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கும் இந்த வாரத்தில் முடிவு கட்டுவாரா? என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அவர் அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர் மேலும் மோசமான விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
முடிவுக்கு வருமா?
இது மட்டுமின்றி அளவுக்கு அதிகமான வன்முறைகளையும், அடுத்தவரை மனதளவில் சீண்டும் செயல்களுக்கும் இந்த பிக்பாஸ் முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால் பிக்பாசையே முடிவுக்கு கொண்டு வரும் சூழல் கூட ஏற்படலாம் என்பதே உண்மை ஆகும்.













