தமிழ் திரையுலகின் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார். துணிவு படத்திற்கு பிறகு அவரது படம் குறித்து விடாமுயற்சி படம் பல சிக்கல்களுக்கு பிறகு முடிவானது. மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தின் பெயர் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.
விடாமுயற்சி ஷூட்டிங்:
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித் ஓமனில் இருந்து தன்னுடைய பைக் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். இதையடுத்து, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து, ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்க உள்ளது. வரும் அக்டோபர் 4-ந் தேதி அபுதாபியில் தொடங்க உள்ளது. அங்கு முக்கியமான சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விடாமுயற்சி படம் சஸ்பென்ஸ் ஆக்ஷன் திரில்லர் படமாக எடுக்கப்பட உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முழுவீச்சில் படப்பிடிப்பு;
மகிழ் திருமேனி படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெளிநாட்டிலே படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை முழுவீச்சில் நடத்தி முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.














