தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வரும் 19-ந் தேதி லியோ படம் வெளியாக உள்ளது. நடிகர் விஜய் சமீபகாலமாக தனது மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளார். அடுத்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் கால்தடம் பதிப்பார் என்று தகவல்கள் உலா வரும் சூழலில், நடிகர் விஜய்யின் செயல்பாடு அதை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளது.
அன்புமணி – திருமாவளவன்
இந்த நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்க்கு நேற்று நடிகர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் சுருட்டு பிடிக்கும் காட்சிக்கு பா.ம.க. கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நடிகர் விஜய் நேற்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கும் நடிகர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார். சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் விஜய், தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளும், எதிரும் – புதிருமாக இருக்கும் இரண்டு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத்தக்க நிகழ்வாக அரங்கேறியுள்ளது.
நடிகர் விஜய்யின் இந்த செயல்பாடு அவரது அரசியல் பயணத்தில் மிகவும் நேர்த்தியான காய் நகர்த்தல் என்றே அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏனென்றால், இவர்கள் இருவரின் கட்சிகளுக்கும் வட தமிழ்நாட்டில் பல மடங்கு செல்வாக்கு உள்ளது. நாளை விஜய் அரசியல் கட்சித் தொடங்கினால் இதுவரை திராவிட கட்சியில் கூட்டணியில் மட்டும் இடம்பெற்று வந்த பா.ம.க. மற்றும் வி.சி.க.வின் ஆதரவு விஜய்க்கு கிடைத்தால் நிச்சயம் அவருக்கு பெரும் பலமாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இவர்கள் இருவரும் விஜய்க்கு பக்கபலமாக இருப்பார்களா? என்பதை காலமே தீர்மானிக்கும். இனி வரும் நாட்களில் நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளை நாம் காணலாம்.














